இங்கு சிவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத் தழும்பை இன்றும் காணலாம். பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும். திருமுல்லை வாசல் என்ற இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர். மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது. இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். |