LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருவள்ளுவர் விரும்பும் குடும்பம் - இரா .பச்சையப்பன்

"திருவள்ளுவர் விரும்பும் குடும்பம் " இரா .பச்சையப்பன் .தனலட்சுமி பதிப்பகம் .முதல் பதிப்பு 2005 .விலை ரூபாய் 30 .மொத்த பக்கங்கள் 175.
# இது ஒரு திருக்குறள் சார்ந்த புத்தகம். திருக்குறள் விளக்கப் புத்தகம் என்றும் சொல்லலாம் .அறத்துப்பால் காமத்துப்பால் எல்லாவற்றையும் தொகுத்து திருவள்ளுவர் விரும்புகின்ற குடும்பத்தின் இலக்கணத்தை ஆசிரியர் வகுத்து தந்து இருக்கிறார் இந்த புத்தகத்தில்..
திருக்குறள் பொருளைத் தமிழ்ச் சான்றோர் தம் எண்ணம் விழைந்தவாறெல்லாம் உரை, கட்டுரை, ஆய்வுரை, கதை, பாடல், நாடகம், ஓவியம், சிற்பம், மொழியாக்கம் எனப் பல்வகை வடிவங்களில் படைத்துள்ளனர்.
இந்த வகையில்
இந்நூலாசிரியரும் திருவள்ளுவர் விரும்பும் குடும்பம் எனும் இந்நூலைப் படைத்தளித்துள்ளார்.
திருவள்ளுவர் வீடு, நாடு, உலகம் ஆகிய யாவும் நலம் பெறவும், வளம் பெறவும் உரிய நெறிமுறைகளை ஒருசேரக் களஞ்கியமாகப் படைத்தளித்துள்ளார். இக்களஞ்சியத்துள் இந்நூலாசிரியர் வீடு நலம் பெறுதற்குத் தான் உணர்ந்தறிந்த அதிகாரப் பொருளைத் தொகுத்து தமிழ்க்குடும்பமாக ஆக்கித் தந்துள்ளார்.
குடும்பத் தலைவன் தலைவியர்க்கு இடையிலான காதலைப் புலப்படுத்த 4 அதிகாரங்களையும்,
திருமணத்தைப் புலப்படுத்த 3 அதிகாரங்களையும்,
கற்புநெறி வாழ்வின் கூறுகளையெல்லாம் உள்ளடக்கிய செல்வப் பொருளின் பொருட்டு நிகழும் நிகழ்வுகளைப் புலப்படுத்த 18 அதிகாரங்களையும்,
இல்லற மாண்பை உணர்த்த 11 அதிகாரங்களையும்,
குடும்பத்திற்கு இனியவற்றைக் குறிப்பிட்டுக்காட்ட 5 அதிகாரங்களையும்,
குடும்பத்திற்கு இன்னாதவற்றைத் தெளிவுறுத்த 2 அதிகாரங்களையும் , உயர் குடும்ப வாழ்வின் உன்னதம் உரைக்க 2 அதிகாரங்களையும்,
என மொத்தம் 45 அதிகாரங்களைத் திறம்பட முறைப்படுத்தி விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் வித்தகம் சிறப்பான ஒன்று.
எண்வகைத் தலைப்புகளால் இயன்றுள்ள இந்நூலில் அமைந்துள்ள உட்தலைப்புகள்,
'எந்நோக்கு அவள் நோக்கு*
'காண்போரை உண்ணும் கண்கள்'
என்பன போலக் கவிதைத் தொடர்களாய் மிளிர்கின்றன. இவர் மிகச் சிறந்த கவிஞர் என்பதை இத்தலைப்புகள் பறைசாற்றுகின்றன.
'இல்லற நெறி இனித்தால் வேறு நெறி எதற்கு 'புல்லியிருந்தவர் புடைபெயர் அள்ளிக் கொண்டது பசப்பு' என்பன போன்ற முறையில் அமைந்துள்ள தலைப்புகள் குறட்பாக்கள் ஒருவரியாக ஆக்கப்பட்டுள்ள இவர்தம் திறத்தைக் காட்டுகின்றன.
நூலின் இடையிடையே. 'நம்பிக்கையே வாழ்வு', 'தம்பியுடையான் படைக்கஞ்சான்' போன்ற முதுமொழிகளையும் 'உற்றவிடத்து உதவும் நண்பன்போல்' 'ஓடுபவரைக் கண்டால் நாய் துரத்துவதுபோல' போன்ற உவமைத் தொடர்களையும் இடமறிந்து கையாளும் பாங்கு போற்றத்தக்கது.
நூலாசிரியர் படைத்துள்ள திருவள்ளுவர் விரும்பும் குடும்பம், செழித்து வளர சிலப்பதிகாரம், ஆத்திசூடி போன்ற பழந்தமிழ் நூல்களின் உயர்மொழிகளையும் உறுதுணையாக்கிக் காட்டுகிறார்.
'முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கிணங்க இந்நூலில் பரிமேலழகர், பரிதி, மணக்குடவர் போன்ற திருக்குறளின் பழைய உரையாசிரியர்கள் காட்டிய உரைகளை ஆங்காங்குக் காட்டியிருப்பது நூலாசிரியரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது.
திருவள்ளுவர் 'குடிமை' 'குடிசெயல் வகை' ஆகிய இரு அதிகாரங்களைக் 'குடும்பம்' எனும் பொருள் கொண்டே படைத்துள்ளார். 'குடும்பம்' எனும் சொல்லாட்சியை,
"இடும்பைக்கிடும்பை கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு" குறள் -1029
எனும் குறளில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை நூலாசிரியர் பொருத்திக் காட்டுவது சிறப்பாகும்.
**
ஆசிரியர் குறிப்பு :
தெ.பொ.மீ.இடம் சிலம்பினைக் கற்றவர் மு.வ. வசம்இவர் நற்றிணை படித்தவர். முதுகலை பட்டமும் தமிழிலே பெற்றவர். தமிழ்ப்பணிச் செம்மல் விருதுமே அடைந்தவர்.
திருக்குறள் நெறிப்படி வாழும் இயல்பினர் ஈரடி நாலடி இயம்பும் ஆன்மிகம். வள்ளுவர் உடைமை வள்ளுவர் கட்டளை உள்ளத்து உணர்ந்து உரைவளம் கண்டவர்.
அஞ்சல் துறையில் முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் பணி ஓய்வுக்குப் பின் 'செம்மொழி' (Classical Language) எனும் நந்தமிழ் மொழிக்கு நூல்கள் பல யாத்து தமிழ்த்தொண்டாற்றும் தகைமையார் .
பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் வல்லவர் இவர் என்று பாராட்டி உள்ளார். நேமிநாதர் சரித்திரம் என்ற ஆங்கில நூலையும் முழுவதுமாகத் தமிழிலே மொழி பெயர்த்துள்ளார்.
பகவத்கீதை, திருவேங்கட சுப்ரபாதம், முகுந்த மாலை, பஜ கோவிந்தம் ஆதித்ய இருதயம் போன்றவற்றை கவிதையாய் வெளியிட்டிருக்கிறார்.
இவர் "ஈரடி நாலடி இயம்பும் ஆன்மிகம்", "திருவள்ளுவர் உடைமைகள்”, "திருவள்ளுவர் கட்டளைகள்' போன்ற நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.
***
கீழ்க்கண்ட எட்டு தலைப்புகளில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
1.காதல்
2. திருமணம்
3. கற்புநெறி 1 பொருள் தேடப் பிரிதல்
4. கற்புநெறி 11 (பிரிந்தவர் பிணைதல்)
5. இல்லறம்
6.இல்லறத்திற்கு இனியவை
7. இல்லறத்திற்கு இன்னாதவை
8. உயர் வாழ்க்கை.
.***
'திருக்குறள் உலகப் பொதுமறை என்னும் சிறப்பு பெற்றதாகும்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"என்ற பாரதியின் கூற்று திருக்குறளின் சிறப்பையும் திருவள்ளுவரின் மாண்பையும் வெளிப்படுத்தும். திருக்குறள் ஒரு கருத்துக் கருவூலம். எனவேதான் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மனிதன் வாழ்வாங்கு வாழ வள்ளுவர் சொல்லாத கருத்துக்களே இல்லை. மனித வாழ்க்கை மட்டுமன்றி அறிவியல், ஆன்மிகம், இயற்கை வளம், வேளாண்மை, வானவியல் என்று திருவள்ளுவர் தொடாத துறைகளே இல்லை. இதில் சிறப்பு என்னவென்றால் பெரிய, ஆழ்ந்த கருத்துக்களை மிகச்சுருக்கமாகவும் அதேசமயம் மனதில் ஆழப் பதியுமாறும் திருவள்ளுவப் பெருந்தகை அமைத்துள்ளார்.
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று இடைக்காடரும்,
'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்"
என்று ஒளவையாரும் குறளின் சிறப்புபற்றி பாராட்டியுள்னர். குறளைப் படிக்கப் படிக்க இன்னும் புதுப்புது கருத்துக்கள் தோன்றுவதைக் காணலாம்.
இந்நூலில் தேர்வு செய்யப்பட்டுள்ள குறட்பாக்கள் வாழ்வில் இனிமை சேர்க்க உதவும் கருத்துக்கள் கொண்டவை.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லறவாழ்க்கை நடத்துவதைக் குடும்பம் நடத்துகிறார்கள் என்போம்.
தமிழ் இலக்கியங்கள் இவ்வாறு இல்லறம் தொடங்குவோரைத் தலைவன், தலைவி என்று குறிப்பிடுகின்றன. இவர்கள் இருவரும் இல்லறம் தொடங்குமுன் ஒருவரையொருவர் எவ்வாறு தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்பதை இலக்கியங்கள் காதல் வாழ்க்கை அதாவது களவியல் என்கின்றன.
திருமண வயதை எய்திய ஒரு தலைவனும் ஒரு தலைவியும் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். தலைவியின் அழகில் தலைவன் மயங்குகிறான். தலைவி தன்னை விரும்புவானா விரும்பமாட்டாளா என்பதை உடனே அறிய முடியவில்லை. தலைவியைத் தலைவன் பார்க்கும்போது தலைவி தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் பார்க்காதபோது அவனைத் தன் கடைக் கண்ணால் பார்த்து மகிழ்கின்றாள்.
"யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்'' 1094
அப்படியிருந்தும் வாயால் ஒன்றும் பேசுவதில்லை. பலநாட்கள் இந்த நாடகம் நடந்தேறினால் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்புவதால்தான் நிகழ்கிறது .அவ்வாறே இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புவது அவர்களது பெற்றோருக்கும் தெரிகிறது. இவர்கள் ஒப்புதலின் பேரில் திருமணம் நடந்தேறுகிறது. சில சமயம் இவர்களது காதல் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அப்போது தலைவி தன்தோழி மூலம் பெற்றோருக்குத் தெரிவிக்க முயல்கிறாள். அஃதறிந்த பெற்றோர் சிலர் உடன்பட்டு தலைவனுக்கும் தலைவிக்கும் மணம்புரிவித்து மகிழவைக்கிறார்கள். சில பெற்றோர் அத்தகு செய்திகளைக் காதில் போட்டுக் கொள்வதில்லை அத்தகு சமயங்களில் தலைவன், தான் தலைவிபால் கொண்டிருக்கும் காதலை உற்றாரும் ஊராரும் அறியவைக்க மடலேறி ஊர்வலம் வருகின்றான். அப்போது ஊராரும் அறிந்து கொள்வதால் அவர்களது பெற்றோரும் வேறு வழியின்றி மணம்புரிய ஒப்புக் கொள்கின்றனர்.
திருமணமும் நடந்தேறுகிறது. தலைவனும் தலைவியும் ஐம்புலன்களும் இன்பம் பெறும் வகையில் புணர்ந்து மகிழ்கிறார்கள். காதற்பிணிக்கு தலைவியே மருந்து என்று புகழ்கின்றான் தலைவன். வைகுண்ட வாசத்தினும் சிறந்தது அரிவை முயக்கம் என்கின்றான். இவர்கள் இருவரும் ஒருவரே போன்று தோன்றுகிறது அவர்களுக்கு.
அனிச்ச மலரினும் மெல்லியன் தலைவியென்றும், தோள்கள் வேய் போன்று வழவழப்புடையதென்றும். முகம் மதிபோன்றதென்றும், மதியிலாவது மறுவுண்டு தலைவி முகத்தில் அதுவுமில்லை என்றும் புகழ்மாலை சாற்றுகிறான் தலைவன். உயிரும், உடம்பும் போல வாழ்கின்றார்கள்.
தலைவி சூடான உணவை உண்டால் தன் நெஞ்சிலிருக்கும் தலைவனைச் சுட்டுவிடப் போகிறதென்று நினைந்து ஆறிய உணவை உண்பாளாம்! தனது நுண்ணிய கணவன் அவளது கண்ணினுள்ளேயே இருக்கின்றான் என்று புகழ்கின்றாள் அவள். இவ்வாறெல்லாம் இனிய கற்பு வாழ்க்கையைத் தலைவனும் தலைவியும் நடத்துகிறார்கள்.
இல்லறம் இயற்றுங்கால் பொருள் தேட உள்நாட்டிலன்றி பிற நாடு சென்றும் திரட்ட வேண்டிய சூழ்நிலையில் தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் நிலையில் குடும்பத் தலைவி தலைவனை நினைந்து நினைந்து வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்மையைப் பிரிவாற்றாமை என்ற அதிகாரம் முதல் கற்பியலில் கூறுகின்றார் திருவள்ளுவர்.
உதாரணமாக,
தலைவன் எந்த வேலைக்குச் சென்றாலும் மாலை வேளையில் வீடு திரும்பிவிடுவான். கணவனைக்கண்ட மனைவி
இன்புறுவாள். கணவன் வீட்டிற்கு வரவில்லை என்றால் அவள் படும்பாடு ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
*மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது" 1221
மாலைப் பொழுதைக் கண்டு தலைவி நீ மாலைப் பொழுதே இல்லை! என் உயிரை உண்ண வந்த எமன் என்கின்றாள் அவள் - தலைவனின் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்பதை இக்குறள் நன்கு விளக்குகிறதல்லவா?
மேலும் அவளது தோள்களும், நெற்றியும் (நுதலும்) கண்களும் நெஞ்சும் மாற்றம் பெறுகின்றன.
“தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்" 1233
திருமண நாளன்று மகிழ்ச்சியால் தலைவியின் தோள்கள் புடைத்து அழகை நல்கின. ஆனால் அவன் பொருள் செயற்கு வெளியே சென்றுவிட்ட இந்தநாளன்று காதலன் பிரிவை எண்ணி மெலிந்து போய் அவன் பிரிவால் அவள் அடையும் துன்பத்தை வெளிக்காட்டி விடுகின்றன. அதேபோல் அவளது நெற்றியும் தலைவன் பிரிவானோ என்ற நிலையை உணர்ந்த போதே பசலை நிறம் கொள்கின்றது.
"முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது. பைந்தொடிப் பேதை நுதல்" 1238
மேலும் அவளது கண்களின் நிலையை வள்ளுவர்,
"முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்" 1239 எனவும், அவளது நெஞ்சு நோகின்ற நிலையை
"நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்செ எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து" 1241எனவும் கூறுகின்றார்.
இவற்றையெல்லாம் விரிவாகத் திருவள்ளுவர் தெரிவித்துப் பின் தலைவன் திரும்பி வந்தபோது அவள் உறுகின்ற இன்பத்தை எப்படியெல்லாம் விவரிக்கின்றார் பாருங்கள்.
தலைவன் பொருள் தேடிச் சென்று விரைவில் திரும்பி வராதபோது நேர்ந்த குற்றத்தை வந்த போதும் தலைவி காட்டினால் அவன் அன்பு மிகுதியாகக் காட்டி அவளை அணைப்பான் என்று கருதுகிறாள்.
உண்ட உணவு செரித்தால்தான் இன்பம் தரும். அதைப்போல ஊடல் செய்தால்தான் இருவரும் புணர்தல் செய்தலினும் இனிமை பயக்கும் என்கின்றாள் தலைவி. இவ்வாறு ஊடல் செய்து கொண்டிருக்கும் தலைவி இன்னும் ஊடல் செய்து கொண்டே இருக்கட்டும். அதிலே தானும் இன்புறுவேன் என்றும், அந்த இரவு வீணாக விடிந்துபோய்விடக்கூடாது; நீண்டு கொண்டே இருக்கட்டும். அப்போதுதான் எங்கள் இன்பமும் நீடிக்கும் என்கின்றான் தலைவன். இவ்வாறு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பின் ஒருங்கிணைந்து புணரும்போது பெறுகின்ற இன்பம் காமத்தின் கரைகண்ட இன்பம் என்கின்றார் திருவள்ளுவர்.
வெளியிலே சென்று வேகமாய் பொருள் சேர்த்து, வீட்டிற்குத் திரும்பிவந்து போகந் துய்த்து வாழ்ந்தால் மட்டும் போதுமா?
இல்லறத்தில் நின்று இல்லறம் அல்லது நல்லறமன்று' என ஔவை மூதாட்டியார் கூறியுள்ள அறஞ்செறிந்த கருத்தை மேற்கொள்ள வேண்டாமா? இல்லறத்தான் எல்லோர்க்கும் உதவிபுரிபவனாக அமைதல் வேண்டும். அதற்காகவே 'இல்வாழ்க்கை, வாழ்க்கைத்துணைநலம், மக்கட்பேறு போன்ற அதிகாரங்களை எழுதியுள்ளார். இல்லறத்தை இனிதே நடத்துபவர்கள் வேறு அறங்கள் என்ன செய்யலாம் என்று தேடி அலைய வேண்டியதில்லை. இல்லறமே நல்ல அறம் தான்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" 43
குடும்பம் விழுப்பமுற்று விளங்க வேண்டுமென்றால் 1. நம் பரம்பரையில் வாழ்ந்து இறந்து போன மூதாதையர், 2. தெய்வம்,3. புதியவராய் நம் இல்லத்திற்கு வந்தவர், 4. சுற்றத்தார், 5. தான் என்ற ஐந்து வகையினரையும் ஓம்ப வேண்டும். இவர்களுக்கு எக்குறையும் வராமல் பாதுகாப்பதுதான் தலையாய இல்வாழ்க்கை என்கிறார் திருவள்ளுவர்.
இப்பொறுப்பினின்றும் வழாது இல்லறத்தான் இல்லறம் இயற்ற வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.
இத்தகு இல்வாழ்க்கை மேலும் நீடிக்க தங்களுக்குப் பின்னர் தங்கள் சந்ததியார் நற்குணமுள்ளவராய் அமைதல் வேண்டுமல்லவா!
"மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்" 70.
என்று கூறி, அத்தகு சந்ததியினரை, இவர்களின் பெற்றோர் என்ன தவம் செய்து இவர்களைப் பெற்றெடுத்தார்களோ என்று உலகம் போற்றுமளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும் என்கின்றார்.
எனவே வாழையடி வாழையாக நல்லோராய் வளர இனிய குடும்பம் அமைதல் வேண்டும். குடும்பம் நன்கு அமைய வேண்டுமானால் பொருட்செல்வம் போதுமானதாக, பயன்படுவதாக இருக்க வேண்டும். அதற்கு வள்ளுவர் வழி கூறுகிறார்.
"ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு" 760
பொருள் திரட்டுவது நன்னெறியில் இருக்க வேண்டும். கொள்ளையடித்து, ஏமாற்றிப் பொருளைச் சேர்க்கும் நெறிகளாக இருக்கக்கூடாது. நன்னெறியில் ஈட்டிய பொருளும் மிகுந்த நிலையில் இருக்க நல்வழிகள் காண வேண்டும். மிகுந்த பொருள் இருப்பில் இருந்தால் தானம் செய்யலாம்; அதனால் இன்பமும் காணலாம் என்கின்றார் திருவள்ளுவர்.
இல்லறத்திலிருப்பவர்கள் யார் மாட்டும் அன்போடு இருக்க வேண்டுமென்றும், விருந்தினரை நன்கு உபசரிக்க வேண்டுமென்றும், இனிய சொற்களைக் கொண்டு எல்லோரிடமும் உரையாட வேண்டும் என்றும், சுற்றத்தாரும் தம்மைச் சுற்றிச் சுற்றி வரும் அளவிற்கு அவர்களைப் போற்ற வேண்டுமென்றும், மற்றவர்களிடமும் ஊருணிபோலவும், பயன் மரம் நடு ஊரில் பழுத்தது போலவும் உதவி செய்து வாழ்தல் இல்லறத்தானுக்கு இனிது என்கின்றார்.
வாழ்க்கையில் சிறக்க வேண்டுமானால் ஊக்கத்துடன் உழைக்க வேண்டும்.
மடியின்மை மேற்கொள்ள வேண்டும். மடி, குடியைக் கெடுத்துவிடும் என்பதை உணரவேண்டும். எவ்வினையையும் ஆளுந்தன்மையோடு எதிர் கொள்ளவேண்டும்மென்றும், முன்னர் சேர்த்த பொருள் எப்போதும் இருக்காது; அது நாளுக்குநாள் இடம்மாறுவது செலவழிந்து போவது உணர்ந்து பொருள் ஈட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.
அத்துடன் நேரிய வழியில் பொருள் திரட்டவேண்டுமென்றும், மனைவியன்றி மாற்றான் மனையாளைப் பார்க்கவும் கூடாது என்கிறார். அவர்கட்கும் உச்சவாழ்க்கை ஒவ்வொருவரும் தன் குடியை உயர்த்தி நிறுத்த இருக்க வேண்டுமென்றும்;
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றினும் தோன்றாமை நன்று"
என்றும் இவ்வுலக வாழ்வை நீக்கும் போது தன்னுடைய புகழை உலகில் நிறுவிச் செல்ல வேண்டுமென்றும் திருவள்ளுவர் விரும்புகிறார்.
திருவள்ளுவர் விரும்பும் குடிப்பெருமையை உயர்த்தும் குடும்ப வாழ்வைப்பற்றி இந்நூலில் நாம் உணர வேண்டும் என்று ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
திருவள்ளுவரின் உயர்ந்த விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் முயல்வோமாக.
 
திரு.நா.கருணாமூர்த்தி (முகநூல் பதிவு )
by Swathi   on 01 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.