LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-11

6.011.திருப்புன்கூர் - திருநீடூர் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன. 
திருப்புன்கூரில்,
சுவாமிபெயர் - சிவலோகநாதர். 
தேவியார் - சொக்கநாயகியம்மை. 
திருநீடூரில்,
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர். 
தேவியார் - சொக்கநாயகியம்மை. 
2192 பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப் 
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத் 
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித் 
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை 
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.1
பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும்விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக்கண்ணும் தானே பரவி யிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோக நாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது.
2193 பின்றானும் முன்றானு மானான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் தன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.2
எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப்பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே!
2194 இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
இனிய நினையாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.3
எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!.
2195 கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.4
கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந் தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!.
2196 நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.5
கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!.
2197 பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை ஒளிதிகழும் மேனி யானைச்
சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.6
மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவளமலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!
2198 உரையார் பொருளுக் குலப்பி லானை
யொழியாமே எவ்வுருவு மானான் தன்னைப்
புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.7
சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே!
2199 கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.8
மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன்கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே!
2200 கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்
திருப்புன்கூ மேவிய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை.
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.9
கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமலிருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது.
2201 இகழுமா றெங்ஙனே யேழை நெஞ்சே
யிகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவ லோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.
6.011.10
யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். 'அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?'

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.