LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-58

2.058.திருக்குடவாயில் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோணேசுவரர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
2092 கலைவாழு மங்கையீர் 
கொங்கையாருங் கருங்கூந்தல் 
அலைவாழுஞ் செஞ்சடையி 
லரவும்பிறையு மமர்வித்தீர் 
குலைவாழை கமுகம்பொன் 
பவளம்பழுக்குங் குடவாயில் 
நிலைவாழுங் கோயிலே 
கோயிலாக நின்றீரே.
2.058. 1
மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2093 அடியார்ந்த பைங்கழலுஞ் 
சிலம்புமார்ப்ப வங்கையில் 
செடியார்ந்த வெண்டலையொன் 
றேந்தியுலகம் பலிதேர்வீர் 
குடியார்ந்த மாமறையோர் 
குலாவியேத்துங் குடவாயில் 
படியார்ந்த கோயிலே 
கோயிலாகப் பயின்றீரே.
2.058. 2
திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 
2094 கழலார்பூம் பாதத்தீ 
ரோதக்கடலில் விடமுண்டன் 
றழலாருங் கண்டத்தீ 
ரண்டர்போற்று மளவினீர் 
குழலார வண்டினங்கள் 
கீதத்தொலிசெய் குடவாயில் 
நிழலார்ந்த கோயிலே 
கோயிலாக நிகழ்ந்தீரே.
2.058. 3
கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர். 
2095 மறியாருங் கைத்தலத்தீர் 
மங்கைபாக மாகச்சேர்ந் 
தெறியாரு மாமழுவு 
மெரியுமேந்துங் கொள்கையீர் 
குறியார வண்டினங்கள் 
தேன்மிழற்றுங் குடவாயில் 
நெறியாருங் கோயிலே 
கோயிலாக நிகழ்ந்தீரே.
2.058. 4
மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர். 
2096 இழையார்ந்த கோவணமுங் 
கீளுமெழிலா ருடையாகப் 
பிழையாத சூலம்பெய் 
தாடல்பாடல் பேணினீர் 
குழையாரும் பைம்பொழிலும் 
வயலுஞ்சூழ்ந்த குடவாயில் 
விழவார்ந்த கோயிலே 
கோயிலாக மிக்கீரே.
2.058.5
நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில் களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர். 
2097 அரவார்ந்த திருமேனி 
யானவெண்ணீ றாடினீர் 
இரவார்ந்த பெய்பலிகொண் 
டிமையோரேத்த நஞ்சுண்டீர் 
குரவார்ந்த பூஞ்சோலை 
வாசம்வீசுங் குடவாயில் 
திருவார்ந்த கோயிலே 
கோயிலாகத் திகழ்ந்தீரே.
2.058.6
பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர். 
2098 பாடலார் வாய்மொழியீர் 
பைங்கண்வெள்ளே றூர்தியீர் 
ஆடலார் மாநடத்தீ 
ரரிவைபோற்று மாற்றலீர் 
கோடலார் தும்பிமுரன் 
றிசைமிழற்றுங் குடவாயில் 
நீடலார் கோயிலே 
கோயிலாக நிகழ்ந்தீரே. 2.058. 7
வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே! ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர். 
2099 கொங்கார்ந்த பைங்கமலத் 
தயனுங்குறளாய் நிமிர்ந்தானும் 
அங்காந்து தள்ளாட வழலாய் 
நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன் 
தங்காதன் மாமுடியுந் 
தாளுமடர்த்தீர் குடவாயில் 
பங்கார்ந்த கோயிலே 
கோயிலாகப் பரிந்தீரே.
2.058. 8
தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர். 
இப்பதிகத்தின் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.058.9
2100 தூசார்ந்த சாக்கியருந் 
தூய்மையில்லாச் சமணரும் 
ஏசார்ந்த புன்மொழிநீத் 
தெழில்கொண்மாடக் குடவாயில் 
ஆசாரஞ் செய்மறையோ 
ரளவிற்குன்றா தடிபோற்றத் 
தேசார்ந்த கோயிலே 
கோயிலாகச் சேர்ந்தீரே.
2.058. 10
அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன் மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர். 
2101 நளிர்பூந் திரைமல்கு 
காழிஞான சம்பந்தன் 
குளிர்பூங் குடவாயிற் 
கோயின்மேய கோமானை 
ஒளிர்பூந் தமிழ்மாலை 
யுரைத்தபாட லிவைவல்லார் 
தளர்வான தானொழியத் 
தகுசீர்வானத் திருப்பாரே.
2.058. 11
தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ் மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றைவல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர். 
திருச்சிற்றம்பலம்

2.058.திருக்குடவாயில் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோணேசுவரர். தேவியார் - பெரியநாயகியம்மை. 

2092 கலைவாழு மங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல் அலைவாழுஞ் செஞ்சடையி லரவும்பிறையு மமர்வித்தீர் குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில் நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.2.058. 1
மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2093 அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப வங்கையில் செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர் குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயில் படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.2.058. 2
திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர். 

2094 கழலார்பூம் பாதத்தீ ரோதக்கடலில் விடமுண்டன் றழலாருங் கண்டத்தீ ரண்டர்போற்று மளவினீர் குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில் நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.2.058. 3
கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர். 

2095 மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந் தெறியாரு மாமழுவு மெரியுமேந்துங் கொள்கையீர் குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில் நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.2.058. 4
மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர். 

2096 இழையார்ந்த கோவணமுங் கீளுமெழிலா ருடையாகப் பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர் குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில் விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.2.058.5
நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில் களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர். 

2097 அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர் இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர் குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயில் திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.2.058.6
பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர். 

2098 பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர் ஆடலார் மாநடத்தீ ரரிவைபோற்று மாற்றலீர் கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில் நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 2.058. 7
வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே! ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர். 

2099 கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும் அங்காந்து தள்ளாட வழலாய் நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன் தங்காதன் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில் பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.2.058. 8
தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர். 

இப்பதிகத்தின் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.058.9

2100 தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும் ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொண்மாடக் குடவாயில் ஆசாரஞ் செய்மறையோ ரளவிற்குன்றா தடிபோற்றத் தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.2.058. 10
அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன் மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர். 

2101 நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன் குளிர்பூங் குடவாயிற் கோயின்மேய கோமானை ஒளிர்பூந் தமிழ்மாலை யுரைத்தபாட லிவைவல்லார் தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.2.058. 11
தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ் மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றைவல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.