LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1301 -1327]

பாடல் 1301 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தன்ன தனந்தன ...... தனதான
பொன்னை விரும்பிய ......பொதுமாதர் 
புன்மை விரும்பியெ ...... தடுமாறும் 
என்னை விரும்பிநி ...... யொருகால்நின் 
எண்ணி விரும்பவு ...... மருள்வாயே 
மின்னை விரும்பிய ...... சடையாளர் 
மெய்யின் விரும்பிய ...... குருநாதா 
அன்னை விரும்பிய ...... குறமானை 
அண்மி விரும்பிய ...... பெருமாளே.
தங்கத்தை நாடி விரும்புகின்ற விலைமாதர்களின் இழிவான குணத்தையே விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்) என்னை விரும்பி நீ ஒரு முறையேனும் உன்னை தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக. மின்னலைப்போல் ஒளி வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான் உண்மைப் பொருளை விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே, உமையன்னை விரும்பிய குறமான் வள்ளியை நெருங்கி விருப்பம் கொண்ட பெருமாளே. 
பாடல் 1302 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ராமப்ரியா 
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத்த தத்த ...... தனதான
மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
   வலையைக்க டக்க ...... அறியாதே 
வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன்
   விழலுக்கி றைத்து ...... விடலாமோ 
சுனையைக்க லக்கி ...... விளையாடு
   சொருபக்கு றத்தி ...... மணவாளா 
தினநற்ச ரித்ர ...... முளதேவர்
   சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே.
மனைவி, மக்கள், உறவினர் என்ற மாய வலையைவிட்டு வெளியேறத் தெரியாமல், என் வினைகளிலே மகிழ்ச்சியும் கர்வமும் அடைந்த நாயினும் கீழான அடியேன், வீணுக்குப் பயனில்லாமல் என் வாழ்நாளைக் கழித்திடுதல் நன்றோ? சுனைக்குள் புகுந்து அதனைக் கலக்கி விளையாடும் வடிவழகி வள்ளி என்ற குறத்தியின் மணவாளனே, நாள்தோறும் நல்ல வழியிலேயே செல்லும் தேவர்களின் சிறையை நீக்கி அவர்களை மீட்ட பெருமாளே. 
பாடல் 1303 - பொதுப்பாடல்கள் 
ராகம் - குறிஞ்சி 
தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானனா தானன ...... தந்ததான
வாரிமீ தேயெழு ...... திங்களாலே
   மாரவே ளேவிய ...... அம்பினாலே
      பாரெலா மேசிய ...... பண்பினாலே
         பாவியே னாவிம ...... யங்கலாமோ 
சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா
   சோதியே தோகைய ...... மர்ந்தகோவே
      மூரிமால் யானைம ...... ணந்தமார்பா
         மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே.
கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே, மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே, உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே, (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ? சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே, ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே, பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா, மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே. 
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 1304 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பூர்வி கல்யாணி 
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 2 களை - 12
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு
   மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே 
ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன்
   நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே 
கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே
   காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா 
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே
   தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.
ஆகாயம், நீர், பூமி, ஆசை, காற்று, தீ ஆகியவை கலந்த மாயக் கட்டடமான இந்தப் பொய்க் குடிசையாம் உடலோடு பிறக்காமல், ஞானம் கைகூட, அழகியதும் அழியாததுமான தமிழ்ச் சொற்களால் உன் திரு நாமத்தை நன்கு கற்றறிந்து (கந்தா, முருகா, குகா என்றெல்லாம் கூறி) புகழ்வதற்கு நீ அருள் புரிய வேண்டும். காட்டில் வாழ்ந்தவளும், திருந்தாத குதலைப் பேச்சைக் கொஞ்சிப் பேசுபவளும் ஆன குறப்பெண் வள்ளியை ஆட்கொள்ளக் கடமைப்பட்டவனே, வெற்றிச் சிறப்புடன் இருந்த தங்கமயமான குலகிரி கிரெளஞ்சமலையைக் கூறு செய்து அதனுடன் போரிட்ட வேலவனே, வண்டுகளைத் தாவித் தாவிச் சுற்றச்செய்யும்படியான வெட்சி மலர் மாலையை அணிந்தவனே, தேவர்கள் வாழும் சொர்க்கத்தில் விளங்கும் சக்ரவர்த்திப் பெருமாளே. 
பாடல் 1305 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன
தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான
குருபர சரவண பவசண் முககுக
   ஒருபர வயமியல் எயினர் மகள்சுக
      மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள்
   இளைகளை நெறுநெறு நெறென உலவுவி
      லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே 
... அடிபடு முரசு தவில்பட
   கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை
      ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவ
சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள்
   பிரளய மிதுவென அதிர உலகர்கள்
      அரகர சிவசிவ அபய மபயமெ
         னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர் 
... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே.
குருபரனே, சரவணபவனே, ஷண்முகனே, குகப் பெருமானே, ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான திருப்புயங்களை உடையவனே, புலிகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக. அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம் எழுப்பும் ஓசை, மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக, கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர, தாமரைமலர் போன்றதும் சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே. அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில் தரப்பட்டுள்ளது.
பாடல் 1306 - க்ஷேத்திரக் கோவை 
ராகம் - யமுனா கல்யாணி 
தாளம் - அங்கதாளம் - 8 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தந்த தானன தானான தந்தன
     தந்த தானன தானான தந்தன
          தந்த தானன தானான தந்தன ...... தனதான
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி 
கொந்து லாவிய ராமே சுரந்தனி
     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே 
செம்பு கேசுர மாடானை யின்புறு
     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
          தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் 
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே 
கம்பை மாவடி மீதேய சுந்தர
     கம்பு லாவிய காவேரி சங்கமு
          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா 
கந்த மேவிய போரூர் நடம்புரி
     தென்சி வாயமு மேயா யகம்படு
          கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா 
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் 
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
     மங்கை மானையு மாலாய்ம ணந்துல
          கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.
(1) கும்பகோணம், அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம், தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும் (4) சீகாழி, நிலையான கொன்றை மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம், அழகு வாய்ந்த (6) சிவகாசி, திரளான பக்த ஜனங்கள் கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம், ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள் கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில், (9) திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா, (11) திருவாடானை, நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர், (13) திருவேடகம், நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14) பழமுதிர்ச்சோலை, தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை (15) பொதியமலை, என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே, (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில் காட்சி தந்தவனே, செம்மையான உபதேசச் சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம், சிறந்த (18) திருவாவினன்குடி - பழநி, (19) குன்று தோறாடல், இவையுடன் பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில், விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை, ஆகிய தலங்களில் அமரும் சிறந்த செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே, சோழநாட்டின் தலைநகராகிய வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பாநதி தீரத்தில் உள்ள (23) காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி விளங்கும் அழகனே, சங்குகள் உலவும் காவேரி ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும், (25) திருச்சிராப்பள்ளி மலையில் வாழ்கின்ற தேவ சேனாபதியே, (26) வயலூர்ப் பெருமானே, நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர், நீ நடனம் புரிந்த தலமாம் அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே, பாவத்தைத் தொலைக்கும் (29) திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே, கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய மார்பனே, எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும், தேவலோகத்து ஸரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகிய இவர்கள் யாவரும் தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன் நின்று, பொருந்திய துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு, குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும் ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும் பெருமாளே. 
குறிப்பு: முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது.(1) கும்பகோணம் - காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம்,(2) திருவாரூர் - சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்,(3) சிதம்பரம் - பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் - நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை,(4) சீகாழி - சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்,(5) மாயூரம் - பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம்,(6) சிவகாசி - பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம்,(7) ராமேஸ்வரம் - சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்,(8) வைத்தீஸ்வரன்கோயில் - முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம்,(9) திருப்பரங்குன்றம் - ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,(10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா - பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல்,(11) திருவாடானை - மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம்,(12) திருச்செந்தூர் - ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல்,(13) திருவேடகம் - சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம்,(14) பழமுதிர்ச்சோலை - மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு,(15) பொதியமலை - பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்,(16) பூரி ஜெகந்நாதம் - ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்,(17) திருவேரகம் - சுவாமிமலை - தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு,(18) திருஆவினன்குடி - பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு,(19) குன்றுதோறாடல் - பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு,(20) மூதூர் - திருப்புனவாயில் - வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது,(21) விரிஞ்சை - விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது,(22) வஞ்சி - சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது,(23) கம்பை மாவடி - காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்,(24) காவேரி சங்கமுகம் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) - சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர், (2 கோயில்கள் - பல்லவனீச்சரம், சாயாவனம் - இவை வைப்புத்தலங்கள்).(25) சிராமலை - திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம்,(26) வயலூர் - திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம்,(27) திருப்போரூர் - செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம்,(28) சிவாயம் - வாட்போக்கி - குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம்,(29) திருக்கண்டியூர் - தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம்.
* உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உள்ள கடவுள் முருகனே என ஸ்வாமிகள் சொல்வதன் மூலம் உலகில் எல்லா மதத்துக் கடவுளும் ஒருவனே என்ற அவரது பரந்த கொள்கை தெரிகிறது.
பாடல் 1307 - பழமுதிர்சோலை 
ராகம் - ஸிந்துபைரவி / பூர்விகல்யாணி 
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி 
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் 
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே 
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் 
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே 
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே 
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே 
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைப்பவன் ஆகி திருமால் என்னும் காப்பவன் ஆகி சிவன் என்னும் அழிப்பவனாகி அம்மூவருக்கும்மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமை தரும் பொருளாகி வருபவனே இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே (அதே ஒலி) என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடல் 1308 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தனதன தான தான தனதன தான தான
     தனதன தான தான ...... தனதான
இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
     இளநகை யாட ஆடி ...... மிகவாதுற் 
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
     இணைமுலை மார்பி லேற ...... மதராஜன் 
கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
     கரணப்ர தாப லீலை ...... மடமாதர் 
கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
     கருதிய ஞான போத ...... மடைவேனோ 
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
     குலிசகு டாரி யாயி ...... மகமாயி 
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
     குணவதி யால வூணி ...... யபிராமி 
பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
     பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே 
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
     பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே.
இலவம் பூ போன்ற சிவந்த வாயிதழ்களை வேண்டுமென்றே அசைத்து, முறையாக மன்மதக் கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக தர்க்கங்களைப் பேசி, எதிரில் தாக்கும், அச்சத்தைத் தரும், கனத்த, கஸ்தூரி முதலியவைகளை அணிந்த, ஆடம்பரமான இரு மார்பிலும் பொருந்தும்படி மன்மத ராஜனுடைய காம லீலைச் சேர்க்கையில் வேகத்துடன் ஓடி, பலவிதமான போக சுகத்தை உண்டுபண்ணும் காமபோக புணர்ச்சியில் பேர் பெற்ற லீலைகளுடன் இளமை பொருந்திய விலைமாதர்களுடைய கலவியில் முழுகி அழுந்தியிருக்கும் இழிந்த தொழிலை உடைய அடியேனும், மேலாகக் கருதப்பட்ட ஞான அறிவை அடைவேனோ? கொலைத் தொழில் புரியும் காளி, சூலாயுதத்தை உடையவள், பைரவி, நீல நிறத்தினள், வனத்தில் வாழும் துர்க்கை, குலிஜம், அங்குசம் இவற்றை ஏந்திய தாய், மகமாயி, குமாரி, வராகி, மோகி, பகவதி, ஆதி ஜோதி, குணவதி, ஆலகால விஷத்தை உண்டவள், அழகி, பலி ஏற்கும் பிரம கபாலத்தினள், யோகத்தினள், பரமரைத் திருமணம் புரிந்தவள், உலகில் சிறந்த பத்தினி, வேத ஞானி (ஆகிய பார்வதியின்) மகனே, தனது சேனைகளுடன் சூரன் (போர்க்களத்தில்) இறக்கும்படி துணிவுடன் எதிர்த்துச் சென்ற சூர தீரனே, பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 1309 - பழமுதிர்சோலை 
ராகம் - ஹம்ஸத்வனி 
தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானதன தான தந்த ...... தனதான
காரணம தாக வந்து ...... புவிமீதே
   காலனணு காதி சைந்து ...... கதிகாண
      நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
         ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே 
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
   ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
      சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
         சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து, காலன் என்னை நெருங்காதபடிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வருவாயாக. நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே. 
பாடல் 1310 - பழமுதிர்சோலை 
ராகம் - ஸிம்மேந்திரமத்யமம் 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
     சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் 
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
     தேடினது போக என்று ...... தெருவூடே 
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
     மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் 
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
     மாயவினை தீர அன்பு ...... புரிவாயே 
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
     சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை 
சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
     தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா 
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
     ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர 
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
     ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே.
நற்குணவதியான தாய், தகப்பன், மனைவி, வீடு, மக்கள், சம்பாதித்த பொருள் இவைகளின் மேல் ஆசையால் மனம் தடுமாற்றத்தை அடைந்து, கெடுதலைத் தருவதான மயக்கத்தில் வீழ்ந்து, இந்த வாழ்வே நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணி தேடிச் சம்பாதித்த பொருள் அத்தனையும் தொலைந்து போகும்படியாக, நடுத்தெருவில் இளம் வயதுள்ளவர்களாக, மார்பகம் மலைபோன்றும், நெற்றி பிறைச்சந்திரனைப் போலவும் உள்ள பொது மகளிரின் மீது மோகத்தால் அடியேனது மனம் நோகாமல், என்றும் வாழ்கின்ற மயிலின் மிசை நீ வந்து உன் பாத கமலங்களில் பணிகின்ற எந்தன் மாயவினை அழியும்படியாக அருள் புரிவாயாக. சேல் மீன்கள் மிகுந்த நாடு, அன்னங்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மதில்கள் வானிலுள்ள நிலவை எட்டும் செம்பொன்னாலான மணிமேடைகள் இவையெல்லாம் கூடிய இந்திரபுரி போன்றது எங்கள் ஊர் என்று சொல்லும்படி மகிழ்ச்சியான வாழ்வு கொண்டிருந்த ¨தரியம் மிகுந்த சூரனைவென்ற வலிமை மிக்க வீரனே, ஆலகால விஷத்தை உண்ட நீலத் தழும்பு உள்ள கண்டத்தை உடையவரும், நீண்ட கனகசபையில் அழகுடன் நடனம் புரிகின்றவரும் ஆகிய பரமேசுவரனாம் உனது தந்தை மகிழ்ச்சி மிகவும் அடையும்படியாக சிறந்ததான உபதேச மொழியை உபதேசித்து பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் கந்தனே, ஆதி முதல்வனாக வந்த பெருமாளே. 
பாடல் 1311 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
     வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே 
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
     வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப் 
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
     பாதகனு மாகி நின்று ...... பதையாமல் 
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
     பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ 
பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
     பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே 
பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த
     பூவைவடி வானு கந்த ...... மருகோனே 
சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
     தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா 
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
     சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
வீரம் வாய்ந்த மன்மதனுடைய காம சாஸ்திர நூலில் சொல்லப்பட்ட போகத்தைத் தரும் அழகிய மாதர்களுடைய வேல் போன்ற கூரிய கண்களால் மயக்கம் அடைந்து, இப்பூமியின் மேல் அன்பான பேச்சுக்களைப் பேசும் அப் பொது மகளிர் வாயினின்றும் பிறக்கும் இன்பச் சொற்களுக்கு இணங்கி அவர்கள் இட்ட வேலைகளை கைகளை வீசிச் செய்து, அவர்கள் மேல் மையல் மிகுந்து மோகாவேசனனாகி அங்கு மிக்கிருந்த பொருள் யாவும் செலவழித்த பின்னர் பாதகனாய் நின்று தவிக்காமல், மனப் பக்குவ நிலை வருவதற்கு, கடப்ப மலர் சூடியுள்ளதும், தண்டை அணிந்ததுமான திருவடி மலரை மிக்க அன்பினால் விரும்பித் தேடி என்றைக்கு உன்னைப் பணிவேனா? என்றும் முழுமையாக இருக்கும் சந்திரனை சடையில் அணிந்துள்ள சிவபெருமானின் இடது பாகத்தைக் கொண்ட பார்வதியின் திருவருளால் வளர்ந்த குழந்தை முருகனே, மண்ணுலகம் எல்லாம் முழுமையாக ஓரடியால் அளந்த காயாம்பூ வண்ணனாகிய திருமால் மகிழும் மருகனே, சூரர்கள் கூட்டங்களை அழித்து அவர்களுடைய கனத்த முடிகளை வெட்டிப் பொடியாகும்படி சாம்பலாகக் கண்ட கூரிய வேலனே, சோலையில் பறந்து உலாவுகின்ற மயிலின் மேல் ஏறி வந்து பழமுதிர்ச்சோலை மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 1312 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
     தானதன தந்த தந்த ...... தனதான
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
     மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய 
வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த
     மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் 
பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து
     பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் 
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
     பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே 
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
     ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி 
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
     யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் 
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
     சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் 
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
     சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.
(இவர்களது மார்பகங்களை) யானைக்கு ஒப்பிடலாம் என்றால், அதன் முகம் ஒரு காலத்தில் (சிவபெருமானால்) கிழிபட்டு விழுந்தது. அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது. பெரிய மலையாகிய கயிலையை ஒப்பிடலாம் என்றால் அது (ராவணனால்) அசைக்கப்பட்டது. மன்மதனுடைய கி¡£டத்துக்கு ஒப்பிடலாம் என்றால் அது (சிவ பெருமான் எரித்த போது) சாய்ந்து விழுந்தது. சக்ர வாள கிரி போல, தேவ லோகம் அண்ட கோளம் இவைகளை எட்டும்படி நிமிர்ந்து எழுந்து, பெரிய தவசிகளும் தரும நெறியைக் கைவிட்டு நிலை குலைய, பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று, குளிர்ந்த சந்தனக் கலவையை அணிந்து, காமப் போரை விரும்பும் மார்பகங்களை உடைய விலைமாதர்களின் இன்பப் படுக்கையை விட்டு நீங்கி, உனது கூத்துக்கு இயன்ற திருவடியை வணங்கி, அதைப் பூஜிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் வருமோ? வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக் கணக்கான மடங்களும், தவங்கள் வேள்விச் சாலைகள் விளங்குகின்ற நிறைவான வீதிகளும், பல கிளைகளாகப் பரந்து வரும், நூபுரம் ஒலிக்கும் ஆகாய கங்கையாகிய சிலம்பாறு அமைதியாக வந்து ததும்பி ஒலிக்கும் படித்துறைகளும் பொருந்த, தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரங்களும், நெருங்கி நின்று சூழ்ந்துள்ள முத்து மணிகள் பதித்த பொலிவுள்ள மண்டபங்களும், சூரியனைப் போல சோதி மிகுந்த அழகிய பொன் மாளிகைகளும் விளங்கும் சோலை மலையில் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* நூபுரம் இரங்கு கங்கை - சிலம்பாறு பாயும் தென்திருமாலிருஞ் சோலையைக் குறிக்கும்.
பாடல் 1313 - பழமுதிர்சோலை 
ராகம் - பீம்பளாஸ் 
தாளம் - அங்கதாளம் - 9 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1
தான தானதன தத்ததன தத்ததன
     தான தானதன தத்ததன தத்ததன
          தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
     வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
          ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை 
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
     யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
          ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத 
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
     மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
          மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே 
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
     மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
          யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் 
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
     வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
          மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி 
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
     வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
          மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே 
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
     ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
          காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை 
காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
     நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
          காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.
திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு* விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான** (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஸஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள்*** எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக. குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி, பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது, பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள், என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே, காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும், (மேலும்) உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
(*3) அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:1. இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள் வெ·காமையுடன் புலன் அடக்குதல்.2. நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள், சைவ சித்தாந்த ஞானம், யாகம்.3. ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர, கோமுக ஆசனங்கள்.4. ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி ஆளும் முறை.5. ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை உள்முகமாகப் பார்த்தல்.6. தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.7. தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள் - இவற்றை அடக்கி தியானித்தல்.8. சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில் சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.(ஆதாரம் 'திருமந்திரம்', திருமூலர் அருளியது).
பாடல் 1314 - பழமுதிர்சோலை 
ராகம் - தேநுக 
தாளம் - திஸ்ரத்ரிபுடை
தனனாதன தானன தத்தன
     தனனாதன தானன தத்தன
          தனனாதன தானன தத்தன ...... தனதான
கருவாகியெ தாயுத ரத்தினி
     லுருவாகவெ கால்கையு றுப்பொடு
          கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் 
கையிலேவிழ வேகிய ணைத்துயி
     லெனவேமிக மீதுது யிற்றிய
          கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் 
தருதாரமு மாகிய சுற்றமு
     நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
          சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத 
சதுராயுன தாளிணை யைத்தொழ
     அறியாதநிர் மூடனை நிற்புகழ்
          தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே 
செருவாயெதி ராமசு ரத்திரள்
     தலைமூளைக ளோடுநி ணத்தசை
          திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் 
திகுதாவுண வாயுதி ரத்தினை
     பலவாய்நரி யோடுகு டித்திட
          சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா 
அருமாமறை யோர்கள்து தித்திடு
     புகர்வாரண மாதுத னைத்திகழ்
          அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே 
அழகானபொன் மேடையு யர்த்திடு
     முகில்தாவிய சோலைவி யப்புறு
          அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே.
கருவாய் அமைந்து தாயின் வயிற்றினில் உருவம் பெற்று, கால் கை என்ற உறுப்புக்களுடன் இனிய வாய், கண்கள், மூக்கு, உடல், செவி என்ற அங்கங்களுடன் மருத்துவச்சியின் கைகளிலே விழும்படியாக பிறந்து வந்து, படுக்கையில் படுத்துக்கொள் என்று மிகவும் பாராட்டித் தூங்கச்செய்த, அக்கரையோடு கவனிக்கும் தாயின் முலையில் நிறைந்த அமுதம் போன்ற பாலைப் பருகி இனியனாக வளர்ந்து, தனக்கென்று வாய்த்த மனைவி, உடன் அமைந்த உறவினர்கள், நல்ல வாழ்வு, நிலைத்து நிற்காத செல்வம், ஊர், இவையெல்லாம் நிலைத்து நிற்கும் எனக் கருதி, உன்னை நினைத்துப் பார்க்காத சாமர்த்தியம் உடையவனாய், உன்னிரு பாதங்களைத் தொழ அறியாத முழு மூடனாகிய என்னை, உன் புகழை ஓதி உண்மை ஞானத்தை அடையச்செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ? போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுரர் கூட்டங்களின் தலை, மூளை, சதை, இறைச்சி இவைகளை தேகக் கொழுப்பும் சத்துத் தாதுக்களும் உள்ள பூதகணங்களுடன் வருகின்ற பேய்கள் திகுதிகுவென்று உணவாக உண்ண, பெருகும் ரத்தத்தை வெகுவாக வந்த நரிகள் குடித்திட, சில கோட்டான்கள் தாமும் அங்கு நடனமாட, போர் செய்த தீரனே, அரிய சிறந்த வேதநெறியாளர்கள் துதித்துப் போற்றுகின்ற, யானை வளர்த்த மகள், அழகிய தேவயானைத் தேவியையும், விளங்கும் வண்டுகள் (பூவிலுள்ள தேனுக்காக) மொய்க்கும் கூந்தலை உடைய குறத்தி வள்ளியையும் தழுவுகின்றவனே, அழகிய பொன்மயமான மாடங்களின் உச்சியில் தங்கும் மேகங்களைத் தொடும் உயரமான சோலைகளும், அற்புதமான, சலனமற்ற பழமுதிர்ச்சோலை* என்னும் மலையில் வீற்றிருப்பவனே, அன்பர்கள் போற்றுகின்ற பெருமாளே. 
* பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.
பாடல் 1315 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தானதத்த தான தனாதனா தன
     தானதத்த தான தனாதனா தன
          தானதத்த தான தனாதனா தன ...... தனதானா
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் 
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
          தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் 
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
          மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி 
வாடைபற்று வேளை யடா வடா வென
     நீமயக்க மேது சொலாய் சொலா யென
          வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே 
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
          பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே 
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
          பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா 
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
          போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி 
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
          பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.
அழகு மிக்க உடல் பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க, கால் சிலம்பின் ஓசை கலீர் கலீர் என்று ஒலிக்க, இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற விலைமாதர்கள் சிலரும், கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில பெண்களும், நூறு லக்ஷ கோடி அளவில் மிகப் பலத்த மோகத்தோடு தேடி வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின் நெஞ்சம் எல்லாம் பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச, அதைக் கண்டு மனக் கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க, அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று நினைவானது ஓடி, (அந்தக் காமப் பித்தக்) காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக் கூவி அழைத்து, உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி, நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள் புரிவாயாக. பாரதத்தை மேரு மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி தமது தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானைமுகத்தவரும், சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே, பாக்கள் சிறப்புடனும் அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று, சிறந்த அகத்திய முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே, போரில் மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று, நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன் (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே, குகனே, விளங்கும் சோலை மலையில் வீற்றீருக்கும் தெய்வமே, தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட (6 + 6 = 12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே. 
பாடல் 1316 - பழமுதிர்சோலை 
ராகம் - சங்கராபரணம் 
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தனன தான தான தத்த
     தனன தான தான தத்த
          தனன தான தான தத்த ...... தனதான
துடிகொ ணோய்க ளோடு வற்றி
     தருண மேனி கோழை துற்ற
          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் 
துறைக ளோடு வாழ்வு விட்டு
     உலக நூல்கள் வாதை யற்று
          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே 
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
     நிதமு மூணி னாலு யர்த்தி
          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே 
உருவி லாத பாழில் வெட்ட
     வெளியி லாடு நாத நிர்த்த
          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ 
கடிது லாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் 
களமு றானை தேர்நு றுக்கி
     தலைக ளாறு நாலு பெற்ற
          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே 
முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா 
முநிவர் தேவர் ஞான முற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
துடிதுடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றிப் போய், இளமையாக இருந்த மேனியில் கபமும் கோழையும் மிகுந்து, இருமலும், காச இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி, இல்லறம், துறவறம் என்ற வகைப்படும் இந்த வாழ்வை விட்டு, உலகிலுள்ள சாத்திர நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி, சுகத்தைத் தரும் சுய அனுபவம் அடைந்து மகிழாமல், உடலை வளர்க்கும் கோரமான பாழும் வயிற்றுக்கு நாள்தோறும் உணவு வகைகளைத் தந்து உடலைக் கொழுக்கச் செய்து, வெறும் ஆயுளை நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ? உருவம் கடந்த பாழ்வெளியில் ஆகாயமாகிய வெட்டவெளியில் இசையுடன் ஆடுகின்ற நடனனே, உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ? வேகமாகத் தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன் அங்கதனும் நிரம்ப மலைகளைக் கடலின் மீது போட்டுக் கட்டிய அணைவழியாக பகைவனது ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும், தேர்ப்படையையும் தூளாக்கி, பத்துத் தலைகள் கொண்ட ராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் ராமனின் மருகனே, வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின் தலைகளில் உள்ள மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற, (துடிக் கூத்து) நடனம் ஆடிய மயிலின் மீதமர்ந்த வீரனே, முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்**) வீற்றிருக்கும் வேல் முருகனே, தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே. 
* சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய பூதகணங்கள் கருடன் முதலிய வாகனங்களுக்குப் பெருந் தொல்லை தந்தமையால் முருகனால் அசுரர்களாக ஆகுமாறு சபிக்கப்பட்டனர். சாபம் நீங்கும்போது அவரவர்கள் விரும்பியபடியே சிங்கமுகன் துர்க்கைக்கு சிம்மவாகனமாகவும், தாரகன் ஐயனாருக்கு யானை வாகனமாகவும், சூரன் கந்தனுக்கு மயில் வாகனமாகவும், பத்மன் முருகனுக்குச் சேவற்கொடியாகவும் ஆனார்கள் - கந்த புராணம்.
** பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.
பாடல் 1317 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
     நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
          பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் 
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
     சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
          பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத 
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
     நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
          மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக 
வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள்
     நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
          மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ 
தேசிக் கானக முற்றதி னைப்புன
     மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்
          சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா 
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
     மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
          தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே 
ஆசித் தார்மன திற்புகு முத்தம
     கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
          ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ 
டாரத் தோடகி லுற்றத ருக்குல
     மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
          ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே.
(தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த) பாசத்தால் அதற்குரிய விலை பேசி முடிவு செய்யும் விலைமாதர்கள். தம்மை விரும்புவர்களின் மனதை மயக்குபவர்கள். கனத்த மலையை ஒத்த மார்பகத்தை உடையவர்கள். மிகவும் பாவ வினையின் காரணத்தால் உடலை எடுத்த வியாபாரிகள். சீவி, ஆய்ந்து முடிந்து கொண்ட கூந்தலை உடையவர்கள். பார்வையாலேயே மோகத்தை எழுப்பும் துஷ்டர்கள். நீங்காத அழுக்கைப் பற்றி ஏறிய பித்தளை ஆபரணங்களை சாம்பலிட்டு பளபளப்பு உறும்படி விளக்கி வைத்துள்ளவர்கள். மார்பிலும் காதிலும் அந்த ஆபரணங்களை அணிந்து தளுக்கு செய்பவர்கள். மிகவும் காமத்தைக் காட்டி, வாய் விரிவாகப் பேசும் பொய்யர்கள். நட்பு செய்து யாரையும் வஞ்சித்து வடிகட்டுபவர்கள். இத்தகையோரின் மாயைச் செயலுக்கே மனத்தைச் செலுத்தி அந்த மாயையுள் நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ? (வள்ளிமலையின்) அழகிய காட்டில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று காவல் இருந்து, (பறவைகளை விரட்ட) கவண் வீசி கல்லைச் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப் பெண் வள்ளி மனம் மகிழும் கணவனே, (தலங்கள் தோறும்) தேடிச் சென்று பாடிய சொல் வன்மை படைத்த புலவராகிய சுந்தரருக்கு இன்பம் தர (பரவை நாச்சியாரிடம்) தூதாகச் சென்ற தந்தை சிவபெருமான் பெற்ற கற்பகமே, தேவர்களுக்கு முதல்வனே, சீகாழியில் திருஞானசம்பந்தராக அவதரித்தவனே, விரும்பி வாழ்த்துவோருடைய உள்ளத்தில் புகும் உத்தமனே, மதுரையில் வைகையில் (வெள்ளம் வர) அணை கட்ட கூலி ஆளாக ஒப்புக் கொண்டு உதிர்ந்த பிட்டமுதுக்காக (பிரம்பினால்) அடி பட்ட சொக்கநாதரோடு, சந்தன மரமும் அகில் மரமும் உள்ள மரக் கூட்டங்கள் மேகம் வரை உயர வளர்ந்து சம்பந்தப்பட்டு நெருங்கிய பழைய பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 1318 - பழமுதிர்சோலை 
ராகம் - சக்ரவாஹம் / குந்தலவராளி 
தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
     மாயமதொ ழிந்து ...... தெளியேனே 
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
     மாபதம ணிந்து ...... பணியேனே 
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
     ஆறுமுக மென்று ...... தெரியேனே 
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
     தாடுமயி லென்ப ...... தறியேனே 
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
     நானிலம லைந்து ...... திரிவேனே 
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
     நாடியதில் நின்று ...... தொழுகேனே 
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
     சோகமது தந்து ...... எனையாள்வாய் 
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே. நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே. முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும் ஆறுமுகம்* என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே. ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூபநிலை கொண்டது ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே. நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால் உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே. குண்டலினியாக ஓடும் பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து** விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே. அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற (ஸா + அகம்) அதுவே நான் என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய். சூரர் குலத்தை வென்று வெற்றியோடு போய் பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆறுமுகம் என்ற தத்துவம்:1. அ, உ, ம், நாதம், விந்து, சக்தி.2. சிவனது ஐந்து முகங்களும் தேவியின் ஒரு முகமும்.3. ஆதி, இச்சா, கிரியா, பரா, ஞான, குடிலா சக்திகள் என்ற ஆறு சக்திகள்.4. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்கள்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1319 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
     மாயநம னுக்கு ...... முறவாகி 
மாதவம ழித்து லீலைகள் மிகுத்து
     மாவடுவை யொத்த ...... விழிமாதர் 
சீருட னழைத்து வாய்கனிவு வைத்து
     தேனித ழளித்து ...... அநுபோக 
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
     சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ 
வாரினை யறுத்து மேருவை மறித்து
     மாகனக மொத்த ...... குடமாகி 
வாரவணை வைத்து மாலளித முற்று
     மாலைகளு மொய்த்த ...... தனமாது 
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
     தோகையுமை பெற்ற ...... புதல்வோனே 
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
     சோலைமலை யுற்ற ...... பெருமாளே.
நீண்ட குண்டலத்தை எட்டியும், மன்மதனைக் கூட மருட்சியுறச் செய்தும், மாயத்தில் வல்ல யமனுடன் உறவு பூண்டும், நல்ல தவ நிலையை அழித்து, காம லீலைகள் அதிகமாகி, மாவடுவுக்கு நிகரான கண்களை உடைய விலைமாதர்கள், மரியாதையுடன் அழைத்து, வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி, தேன் போல் இனிக்கும் வாயிதழைத் தந்து, காம அநுபோகச் சேர்க்கையில் சிக்க வைத்து, மோசம் விளையும்படிச் செய்து, நன்மையை அழிய வைக்கும் வேசியர்களுடைய உறவு நல்லதாகுமோ? கச்சைக் கிழித்து மீறி, மேரு மலையையும் மிஞ்சி, சிறந்த பொன் குடம் போல் விளங்கி, அன்பாகிய ஆதரவை வைத்து, மிக்க அழகைக் கொண்டு, மாலைகளும் நெருங்கிய மார்பகங்கள் விளங்கும் மாது, கழுத்தணியாகிய (தோரை என்ற) அணி வடத்தைப் பூண்ட புயங்களை உடையவள், யோகினி, சாமர்த்தியம் நிறைந்தவள், மயில் போன்ற உமா தேவி பெற்ற புதல்வனே, சூரனையும் அவன் சுற்றத்தாரையும் அழித்து, வேலாயுதத்தைக் கையில் ஏந்தி சோலை மலையாகிய பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 1320 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனத்தத் தாத்த
     தனன தனதன தனத்தத் தாத்த
          தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
     விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி
          அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக 
அவச இதமொழி படித்துக் காட்டி
     அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
          அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம் 
ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி
     எழுத வரியிடை வளைத்துக் காட்டி
          உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி 
உருகு கடிதட மொளித்துக் காட்டி
     உபய பரிபுர பதத்தைக் காட்டி
          உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ 
முழுகு மருமறை முகத்துப் பாட்டி
     கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
          முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா 
முடுகு முதலையை வரித்துக் கோட்டி
     அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
          முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர் 
பழைய கடதட முகத்துக் கோட்டு
     வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
          பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர் 
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
     குமர குலமலை யுயர்த்திக் காட்டு
          பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.
அழகு விளங்கும் கூந்தலை விரித்துக் காட்டியும், கண்களின் கடைப் புறம் இரண்டையும் சுழற்றிக் காட்டியும், அழகிய பொன்னாலாகிய ஆபரணங்களையும் குண்டலங்களையும் விளக்கமுறக் காட்டியும், காமத்தை விளக்க வல்லதும் தன் வசம் இழக்கச் செய்வதுமான இனிய பேச்சுக்களை பேசிக் காட்டியும், வாயிதழின் செம்மை இழந்த பவளம் போன்ற வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகக் குறி இட்டு அழுத்தினதைக் காட்டியும், அழகிய முத்து வடம் தொங்கும் இரண்டு மார்பகங்களை அசைத்துக் காட்டியும், எழுதுவதற்கு அரிய இடுப்பை வளைத்துக் காட்டியும், அணிந்து உலவி வரும் புடவையை தளர்த்திக் காட்டியும், நட்புப் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், உள்ளத்தை உருக வைக்கும் பெண்குறி இடத்தை மறைப்பது போல் காட்டியும், இரண்டு சிலம்பு அணியும் பாதங்களைக் காட்டியும், உயிரையே விலைக்குக் கொள்பவராகிய அந்த விலைமாதர்கள் மேலுள்ள விருப்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? அரிய வேதங்களில் வல்லவளான பெரியவளின் (ஸரஸ்வதி - வேத முதல்வி) கணவராகிய பிரமனின் குடுமியை அறுத்துப் போட்ட முதல்வனே, குகைகள் அமைந்த பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழியும்படி கோபித்தவனே, இறைவன் திருவருளை நாடி, விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, சூழ்ந்த அடியார்கள் துதிக்க, பிள்ளையை பெற்றோர்களிடம் சேர்ப்பிக்க (பிள்ளையை உயிரோடு தா என்று) முறை இட்ட சுந்தரர் பாடிய தமிழ்த் தேவாரத்தை* அன்பு பெருக்குடன் கேட்ட பழைய நீதிமான், பழைய மதம் பாயும் இடமாகிய முகத்தையும், தந்தத்தையும் உடைய யானையின் தோலை உரித்து அணிந்தவர், வேத மொழிகளைக் கூறும் பரம்பொருள், கங்கையைச் சடையில் சூடியுள்ள சிவபெருமான் உன்னைப் பணிய அவருக்குச் சிவ மயத்தை (பிரணவப் பொருளை) உபதேசித்த குமரனே, பழமுதிர்ச்சோலை மலையில் சிறப்புற்று விளங்கும், அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டும் பெருமாளே. 
* திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.
பாடல் 1321 - பழமுதிர்சோலை 
ராகம் - யமுனா கல்யாணி - மத்யம ஸ்ருதி 
தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தத்தத் தனதன தத்தத்
     தனதன தத்தத் தனதன தத்தத்
          தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
     கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
          தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித் 
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
     டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
          சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும் 
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
     திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
          தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ...... டுயிர்போமுன் 
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
     திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
          செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய் 
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
     புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
          கடுகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன் 
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
     திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
          களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே 
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
     குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
          குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே 
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
     சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
          குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே.
தலைமயிரானது கொக்கின் இறகு போல நரைத்தும், கலகல என்று பல்லின் கட்டுக்கள் யாவும் விட்டும், தளர்ந்த நடை ஏற்பட்டு, தத்தித்தத்தி அடிகளை வைத்தும், தடுமாற்றத்துடன் கம்பை ஊன்றித் தள்ளாடி நடந்தும், இருமல் தொடர்ந்து பெருகியும், உணவு தொண்டையில் அடைத்து விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், சளி அதிகரித்தும், பித்தமும் பலத்துப் போய், பலதடவையும் எள் எண்ணெயில் இட்டு ஒன்றுபட்டு எரிக்க கடுகு, நெல்லி, தான்றி ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலை, சுக்கு, திப்பிலி முதலியவற்றை இட்டு வறுத்து, தெளிவாக கஷாயத்தை வடிகட்டி வாய்க்குள் இட்டும், உடல் செத்துப்போய், உயிர் நீங்குவதற்கு முன்னாலே, விளக்கமுடைய உனது திருப்புகழைக் கற்று, அப்புகழுக்கு உண்டான சொற்களைப் பழகுமாறு செய்து, உன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு தொழுது வணங்கி, பிறப்பை அறுப்பதற்கு மேலான மோக்ஷத்திற்குத் திருவருளை அருள்வாயாக. சேணத்தை இறுக்கக் கட்டி, அங்கவடியை அமைத்து, குதிரைப் படையை நடத்தி, துதிக்கையை உடைய மலைபோன்ற யானைப்படையை வேகமாகச் செலுத்தி திடுமென ஓட்டிப் போர் செய்யும் சூரன் பெரும் சேனை அழிந்து போய், தடுக்கமுடியாமல் கைவிட்டு, அலைமோதும் கடலுக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, தாக்கி, செருக்குடன் கூடிய மயிலை அழகுறச் செலுத்தி போர் செய்யும் பெருமானே, வஜ்ராயுதப் படையுள்ள இந்திரன் மகளாம் தேவயானைக்குத் தப்பியும் குறவர் மகளாம் வள்ளிக்கு மனத்தைப் பறிகொடுத்தும், குளிர்ந்த தினை மிகுதியாக விளைகின்ற தினைப்புனத்திலே அலைந்து திரிந்தவனே, கொடுமையான கிரெளஞ்சமலையை வேலால் குத்தி அழித்து, போரை விளைவித்து, தானே மேலானவனாக நின்று, மேலான மலையிற் சென்று பொருந்தி வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப் பெருமாளே. 
பாடல் 1322 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -
தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
     மணபரி மளங்கள் வேர்வை ...... யதனோடே 
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
     வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின் 
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
     முகமுகமொ டொன்ற பாய ...... லதனூடே 
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
     முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே 
சிலைநுத லிளம்பெண் மோகி சடையழ கியெந்தை பாதி
     திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா 
சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக
     திகழயி லெறிந்த ஞான ......முருகோனே 
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
     குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா 
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
     குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே.
மலர்ப் படுக்கை அசைந்து கலைய, மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி சரிந்து விழ, நறு மணங்கள் வேர்வையுடன் ஒன்றுபட, விசாலமான கண்கள் அசைய, பிறை போலும் நெற்றி புரண்டு குங்குமம் கலைய, அலங்காரமாய் அணிந்த ஆடை நெகிழ்ந்து போக, இளநீர் போன்ற மார்பகங்கள் இரண்டும் அசைய, நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டம் கொள்ள, முகம் முகத்தோடு பொருந்த, படுக்கை அணையில் பெரிய மோகச் செயலில் கலந்து முழுகி (நான்) இன்புற்று இருந்தாலும், மாலைகள் அசையும் திருமுடி முதலான உனது வடிவத்தையும் அழகிய திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன். வில் போன்ற நெற்றியை உடைய இளம் பெண், ஆசையைத் தருபவள், அழகிய சடையை உடையவள், என் தந்தையாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் விளங்கும் மரகதம் போல் பச்சை நிறத்து அழகிய உருவினளாகிய உமா தேவியின் குழந்தையே, புன்னகை செய்து, சூரனும், மலையும், கடலும் எரிந்து போக, கையிலே திகழ்ந்த வேலை எறிந்த ஞான முருகனே, கொலைத் தொழிலை நன்றாகப் பயின்றிருந்த வேடர்கள் பெண்ணாகிய வள்ளி மணந்த தோளனே, நற் குணனே, கடப்ப மலர் மாலையை அணிந்த மார்பனே, மின்னல் கொடி போன்ற ஜோதியே, காலைக் கதிர் போல ஒளிவீசும் ஞானியே, (பழமுதிர்) சோலை மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 1323 - புதிய பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான
கருவெனு மாயை உருவினில் மூழ்கி
     வயதள வாக ...... நிலமீதில் 
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
     வெகுவித மாக ...... கவிபாடித் 
தெருவழி போகி பொருளெனு மாசை
     திரவியம் நாடி ...... நெடிதோடிச் 
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
     சிறுவித மாக ...... திரிவேனோ 
அருளநு போக குருபர னேஉன்
     அடியவர் வாழ ...... அருள்வோனே 
அரனிரு காதில் அருள்பர ஞாந
     அடைவினை ஓதி ...... அருள்பாலா 
வெருவிடு சூரர் குலஅடி வேரை
     விழவிடு சாசு ...... வதிபாலா 
மிடலுட லாளர் அடரசுர் மாள
     விடுமயில் வேல ...... பெருமாளே.
தாயின் கருப்பையிலே மாயையான உருவத்திலே மூழ்கி காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு வந்த பின், உலகிலுள்ள கலை வல்லுனர்களின் பலவிதமான கலை நூல்களைப் பயின்று, அனேக விதமான கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று, பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி நெடும் தொலைவு ஓடி, வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் மோகத்திலே முழுகி, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள் ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே, அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான சக்தியின் குமரனே, வலிமையான உடலமைப்பு கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு செலுத்திய படையான வேலாயுதத்தை உடைய பெருமாளே. 
பாடல் 1324 - புதிய பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தந்த தனந்த தனத்த தானன
     தந்த தனந்த தனத்த தானன
          தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா
தங்க மிகுந்த முலைக்க டாமலை
     பொங்க விரும்பி யமுத்து மாலைகள்
          தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே 
சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு
     மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர்
          சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் 
கொங்கை குலுங்க வளைத்து வாயத
     ரங்க ளருந்தி ருசிக்க வேமத
          குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை 
கொண்ட வரிந்த விதத்தி னாடர
     சங்கி லிகொண்டு பிணித்து மாமயில்
          கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ 
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம்
     வந்த துகண்டு பயப்ப டாதவர்
          சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் 
சிங்க முகன்த லைவெட்டி மாமுகன்
     அங்க மறுந்து கிடக்க வேவரு
          சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா 
மங்கை மடந்தை கதிக்கு நாயகி
     சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை
          மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா 
மந்தி ரதந்தி ரமுத்த யோகியர்
     அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள்
          வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே.
பொன்னணிகள் மிக்கணிந்து, கடக்கமுடியா மலை போல விம்மிப் பெருகிய மார்பகத்தில் ஆசையுடன் அணிந்த முத்து மாலைகள் தங்கும்படியாக, கர்வத்தைக் காட்டும் விலை மகளிர். தங்கள் பேச்சினால் வந்தவரை மிகச் சஞ்சலம் அடையச் செய்து மயங்கவைத்து, ஒரு கட்டிலில் அவர்களுடன் சுகித்து இருந்து, மிகுந்த நறுமணம் உள்ள சந்தனத்தை அப்பி மகிழ்ந்து, நூலைப் போன்ற மெலிந்த இடுப்பு படுக்கையில் அசைவுற, அவர்களது மார்பகங்கள் குலுங்க, கழுத்தை வளைத்து, வந்தவரின் வாயிதழ்களைச் சுவைத்து ருசிக்க, மோகத்தை மூட்டும் குங்குமக் கலவை பூசிய கழுத்திலிருந்து குயிலின் ஓசையை வெளிப்படுத்தும் விலை மகளிர் இந்த விதமாக ஆடிட, தங்கள் கழுத்திலுள்ள சங்கிலியால் பிணித்து, அழகிய மயில் போல கொஞ்சி மகிழும் இந்த வறட்டு கர்வம் உடைய வீணிகளின் உறவு நல்லதாகுமா? சந்திரன் பிறந்த பாற்கடலில் ஆலகால விஷம் எழுந்தபோது அதைக் கண்டு சிறிதும் பயப்படாதவராகிய சிவபெருமான் (சூரனைக் கண்டு) மனம் நடுங்கி இருந்தபோது, உனது மயில் மீது ஏறி சிங்கமுகாசுரன் சிரத்தை வெட்டி, தாரகாசுரன் உடலின் அங்கங்களை அறுத்தெறிந்து, பாய்கின்ற சரபப் பக்ஷி போலச் சென்ற வேலினை உடைய குருநாதனே, தெய்வ மங்கை, மடந்தை, மோட்ச கதிக்கு நாயகி, சங்கரி, பேரழகி, யானை முகத்தவனாகிய கணபதியை மகனாகப் பெற்ற ஈஸ்வரி பார்வதி அருளிய பாலனே, மந்திர, தந்திரங்களில் வல்ல, முற்றும் துறந்த யோகியர் தங்களது செங்கைகளை சிரம் மீது கூப்பி அஞ்சலி செய்ய, அவர்களுக்கு கருணையுடன் அருள் பாலித்து அவர்களின் முன்வந்து (குடைக் கூத்து என்னும்) நடனத்தை ஆடி அருளிய பெருமாளே. 
பாடல் 1325 - புனவாயில் 
ராகம் - ரஞ்சனி 
தாளம் - ஆதி 
- எடுப்பு - 3/4 இடம்
தனனந் தந்தன தானன தந்தன
     தனனந் தந்தன தானன தந்தன
          தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான
உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது
     விழியும் பஞ்சுபொ லானது கண்டயல்
          உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால் 
ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது
     முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது
          உடலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி 
வரவொன் றும்பலி யாதினி என்றபின்
     உறவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ
          மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ...... இயல்தோகை 
மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய
     வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித
          வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் ...... வருவாயே 
அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள
     கவியின் சங்கமி ராகவ புங்கவன்
          அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன் 
அருளுங் கண்டத ராபதி வன்புறு
     விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய
          அகமும் பைந்தொடி சீதைம றைந்திட ...... வழிதோறும் 
மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள்
     கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி
          மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான 
மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண்
     முழுதுங் கண்டந ராயணன் அன்புறு
          மருகன் தென்புன வாயில மர்ந்தருள் ...... பெருமாளே.
பேச்சும் நின்றுவிட, நாவும் வறண்டு போய்விட, கண்களும் பஞ்சடைந்தன போல ஆகிவிட, இவற்றைக் கண்டு வருத்தம் அடையும் உறவினர்கள் வாயிலே விட்ட பால் உள்ளே இறங்காமல் தேங்கி நிற்க, கடைவாயிலிருந்து பால் ஒழுக, துயரம் மிகுந்த உடம்பு குளிர்ந்து போக, முடங்கிய கைகளும் கால்களும் யமனுடைய பாசக்கயிற்றைக் கண்டு நிமிர்ந்திட, பருத்த உடலும் தொந்தியும் இளைத்து வேகமாக வடிந்து போக, வைத்தியர் வந்து பார்த்து இனிமேல் ஒரு வைத்தியமும் பலிக்காது என்று கூறிவிட்ட பின்பு சுற்றத்தாரும் பெண்களும் உடலின் மீது விழுந்து முட்டிக்கொண்டு அழ, யமன் இங்கு வந்து என் உயிரைக் கொண்டு போகின்ற நாளில் அழகிய தோகை மயிலும், பன்னிரு திருக்கரங்களும், பன்னிரு வலிய தோள்களாம் குன்றுகளிலே தவழும் வாசமிகு கடப்ப மாலையும், பண்பு மிகுந்த, காட்டு மின்னல் போன்ற வள்ளி, தேவயானை ஆகியோருடன் என் முன்னால் நீ வர வேண்டும். சூரியனின் மைந்தனான சுக்¡£வன் புகழ் மிக்க வானர மந்திரியாகிய மாருதியினிடத்தில் இராகவனாகிய மரவுறி தரித்தவனது அறிவின் திறத்தைக் கண்டு அருள்வாய் என்று அன்போடு அனுப்ப, அநுமன் இராமனின் அருளைக் கண்டு, மேலும் கூறினான் "அந்த அண்டத்து அதிபதி (இராவணன்) வலுக்கட்டாயமாக (சீதையை அபகரித்து) வானில் புஷ்பக விமானத்தில் கொண்டு செல்லும்போது, மனம் வருந்தி வாயாரப் புலம்பிய பசுங்கொடி போன்ற சீதையும் மறைவாக, சென்ற வழியில் எல்லாம், தான் அணிந்திருந்த நகைகளாகிய குண்டலம், வளைகள், சிலம்புகள், கொலுசு, பொன் சதங்கை, மாலைகள், மணிகள் ஆகியவற்றைப் பந்து போல் வீசி எறிந்தாள், அந்த நகை மூட்டை இதுதான்" என்று தந்திட, மேரு மலை அளவுக்கு உயர்ந்து பக்கத்தில் தொடராக உள்ள வானம் அனைத்தையும் (திரிவிக்ரமாவதாரத்தில்) பாதத்தால் அளந்த நாராயணனாம் திருமால் மிகவும் அன்பு கொண்ட மருகனாம், தென் திசையில் உள்ள புனவாயில்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 'புனவாயில்' என்ற ஊர் இப்பொழுது 'திருப்புனவாசல்' என்று விளங்குகின்றது.
பாடல் 1326 - திருவெழுகூற்றிருக்கை 
ராகம் - தர்பாரிகானடா 
தாளம் - ஆதி 
- எடுப்பு 3/4 இடம்
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை 
இருபிறப் பாளரி னொருவ னாயினை
     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் 
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
          மூவரும் போந்து இருதாள் வேண்ட
               ஒருசிறை விடுத்தனை 
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை 
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை 
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
               அறுகு சூடிக் கிளையோ னாயினை 
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
          கொருகுரு வாயினை 
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை 
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை 
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
          ஏரகத் திறைவ னென இருந்தனையே.
[குறிப்பு: இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு. 
                                            1
                                         1 2 1
                                      1 2 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 
இடையில் தேர் தட்டு     . . . . . . . . . . . . . . . . . . . 
                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                      1 2 3 2 1
                                         1 2 1
                                            1
சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் .. (மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக)]. 
தேர் படத்தைக் காண இங்கே சொடுக்கவும் 
தேர் படத்தின் பிரதியை பதிவிரக்க இங்கே சொடுக்கவும் (302kb zip file) 
ஒரு (1) பொருளாகிய பிரணவமாம் முழுமுதலின் (சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில், சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும் அமைந்து, அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து, சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி, மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு விளங்குகிறாய். (உபநயனத்துக்கு முன்னும் பின்னும்) இரு (2) பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில் ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய திருஞானசம்பந்தராய் அவதரித்தாய். (ஓரா - இரு பொருள் - ஒன்று -1- மற்றும் தெரியாமல்) பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக, (இருமை - இரு பொருள் - இரண்டு -2- மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில் (முன்னாள் = இரு பொருள் - மூன்று -3- மற்றும் முன்பொரு நாள்) நான்கு (4) முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால் குட்டிக்) கலைத்து, அரி, அரன், இந்திரன் ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில் பணிந்து முறையிட்டு வேண்ட, பிரமனை நீ அடைத்த ஒரு (1) சிறையினின்றும் விடுவித்தாய். ஒரு (1) நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி, மூன்று (3) பக்கங்களிலும் நீர் உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச (5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்), நீ உலகை வலம் வந்தாய். நான்கு (4) விதமான தந்தங்களை உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்), மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும், இரண்டு (2) காதுகளையும், ஒரு (1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய இந்திரனின் மகளாகிய தேவயானையை மணம் செய்து கொண்டனை. ஒரு (1) வகையான யானை வடிவிலே இள யானை, கிழ யானை என இரு (2) வடிவிலும் வரவல்லதும், கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத (3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு மூத்த சகோதரனாக* விளங்கினாய். (நால்வாய் = இரு பொருள் - நான்கு -4- மற்றும் வாயினின்று) தொங்கும் துதிக்கை முகத்தோனும், ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும், அறுகம் [அறுகம் = இரு பொருள் - ஆறு -6- மற்றும் அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு இளைய சகோதரன் என விளங்குகிறாய். நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின் மூலமாக நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன் என்று உணர்த்தப் பெறுபவரும், சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3) தம் கண்களாக உடையவரும், நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2) மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய். முன்பொரு (1) நாள் உமாதேவியின் இரு மார்பிலும் சுரந்த ஞானப்பாலைப் பருகி இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி, நால்வகைக் கவியிலும்** அரசனாகி, பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு அடிமைப்படாத உரிமையாளனாகி, ஆறு முகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற இளமை ததும்பும் அழகோடு சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத் தோன்றினாய். கார்த்திகைப் பெண்களாகிய ஆறு நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய். கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும் தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய். நான்கு மறைகளைப் போன்று மிக ரகசியமானதும், மூன்று பிரிவுகளோடு சிவந்த கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட மலையை இரண்டு கூறாகப் பிளக்குமாறு ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய். காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும் சரவணபவ என்னும் உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத கமலங்களைப் போற்ற, திருவேரகத்தின் இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய். * முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார்.அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.** தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 1327 - மதுரை 
ராகம் - ... ; தாளம் - ... ;
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா 
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே 
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே 
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா 
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.
சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே, பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக. உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே, இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இது ஒரு துதிப்பாடல். வேண்டுகோள் எதுவும் இல்லாதது.
பாடல் 1328 - மங்களம் 
ராகம் - ... ; தாளம் - ... ;
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். 
தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
திருப்புகழ் முற்றிற்று.

பாடல் 1301 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தன்ன தனந்தன ...... தனதான

பொன்னை விரும்பிய ......பொதுமாதர் 
புன்மை விரும்பியெ ...... தடுமாறும் 
என்னை விரும்பிநி ...... யொருகால்நின் 
எண்ணி விரும்பவு ...... மருள்வாயே 
மின்னை விரும்பிய ...... சடையாளர் 
மெய்யின் விரும்பிய ...... குருநாதா 
அன்னை விரும்பிய ...... குறமானை 
அண்மி விரும்பிய ...... பெருமாளே.

தங்கத்தை நாடி விரும்புகின்ற விலைமாதர்களின் இழிவான குணத்தையே விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்) என்னை விரும்பி நீ ஒரு முறையேனும் உன்னை தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக. மின்னலைப்போல் ஒளி வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான் உண்மைப் பொருளை விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே, உமையன்னை விரும்பிய குறமான் வள்ளியை நெருங்கி விருப்பம் கொண்ட பெருமாளே. 

பாடல் 1302 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ராமப்ரியா தாளம் - திஸ்ர ஏகம் - 3

தனனத்த தத்த ...... தனதான

மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா   வலையைக்க டக்க ...... அறியாதே 
வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன்   விழலுக்கி றைத்து ...... விடலாமோ 
சுனையைக்க லக்கி ...... விளையாடு   சொருபக்கு றத்தி ...... மணவாளா 
தினநற்ச ரித்ர ...... முளதேவர்   சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே.

மனைவி, மக்கள், உறவினர் என்ற மாய வலையைவிட்டு வெளியேறத் தெரியாமல், என் வினைகளிலே மகிழ்ச்சியும் கர்வமும் அடைந்த நாயினும் கீழான அடியேன், வீணுக்குப் பயனில்லாமல் என் வாழ்நாளைக் கழித்திடுதல் நன்றோ? சுனைக்குள் புகுந்து அதனைக் கலக்கி விளையாடும் வடிவழகி வள்ளி என்ற குறத்தியின் மணவாளனே, நாள்தோறும் நல்ல வழியிலேயே செல்லும் தேவர்களின் சிறையை நீக்கி அவர்களை மீட்ட பெருமாளே. 

பாடல் 1303 - பொதுப்பாடல்கள் 
ராகம் - குறிஞ்சி தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தானனா தானன ...... தந்ததான

வாரிமீ தேயெழு ...... திங்களாலே   மாரவே ளேவிய ...... அம்பினாலே      பாரெலா மேசிய ...... பண்பினாலே         பாவியே னாவிம ...... யங்கலாமோ 
சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா   சோதியே தோகைய ...... மர்ந்தகோவே      மூரிமால் யானைம ...... ணந்தமார்பா         மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே.

கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே, மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே, உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே, (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ? சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே, ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே, பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா, மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே. 
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 1304 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - சதுஸ்ர ரூபகம் - 2 களை - 12

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான

வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு   மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே 
ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன்   நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே 
கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே   காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா 
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே   தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.

ஆகாயம், நீர், பூமி, ஆசை, காற்று, தீ ஆகியவை கலந்த மாயக் கட்டடமான இந்தப் பொய்க் குடிசையாம் உடலோடு பிறக்காமல், ஞானம் கைகூட, அழகியதும் அழியாததுமான தமிழ்ச் சொற்களால் உன் திரு நாமத்தை நன்கு கற்றறிந்து (கந்தா, முருகா, குகா என்றெல்லாம் கூறி) புகழ்வதற்கு நீ அருள் புரிய வேண்டும். காட்டில் வாழ்ந்தவளும், திருந்தாத குதலைப் பேச்சைக் கொஞ்சிப் பேசுபவளும் ஆன குறப்பெண் வள்ளியை ஆட்கொள்ளக் கடமைப்பட்டவனே, வெற்றிச் சிறப்புடன் இருந்த தங்கமயமான குலகிரி கிரெளஞ்சமலையைக் கூறு செய்து அதனுடன் போரிட்ட வேலவனே, வண்டுகளைத் தாவித் தாவிச் சுற்றச்செய்யும்படியான வெட்சி மலர் மாலையை அணிந்தவனே, தேவர்கள் வாழும் சொர்க்கத்தில் விளங்கும் சக்ரவர்த்திப் பெருமாளே. 

பாடல் 1305 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தனதன தனன தனதன   தனதன தனதன தனன தனதன      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததனதனதன தனதன தனன தனதன   தனதன தனதன தனன தனதன      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான

குருபர சரவண பவசண் முககுக   ஒருபர வயமியல் எயினர் மகள்சுக      மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜஉழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள்   இளைகளை நெறுநெறு நெறென உலவுவி      லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே 
... அடிபடு முரசு தவில்பட   கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை      ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவசங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள்   பிரளய மிதுவென அதிர உலகர்கள்      அரகர சிவசிவ அபய மபயமெ         னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர் 
... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே.

குருபரனே, சரவணபவனே, ஷண்முகனே, குகப் பெருமானே, ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான திருப்புயங்களை உடையவனே, புலிகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக. அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம் எழுப்பும் ஓசை, மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக, கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர, தாமரைமலர் போன்றதும் சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே. அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில் தரப்பட்டுள்ளது.

பாடல் 1306 - க்ஷேத்திரக் கோவை 
ராகம் - யமுனா கல்யாணி தாளம் - அங்கதாளம் - 8 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2

தந்த தானன தானான தந்தன     தந்த தானன தானான தந்தன          தந்த தானன தானான தந்தன ...... தனதான

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி 
கொந்து லாவிய ராமே சுரந்தனி     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே 
செம்பு கேசுர மாடானை யின்புறு     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி          தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் 
செஞ்சொ லேரக மாவா வினன்குடி     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே 
கம்பை மாவடி மீதேய சுந்தர     கம்பு லாவிய காவேரி சங்கமு          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா 
கந்த மேவிய போரூர் நடம்புரி     தென்சி வாயமு மேயா யகம்படு          கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா 
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் 
இந்தி ராணிதன் மாதோடு நன்குற     மங்கை மானையு மாலாய்ம ணந்துல          கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.

(1) கும்பகோணம், அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம், தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும் (4) சீகாழி, நிலையான கொன்றை மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம், அழகு வாய்ந்த (6) சிவகாசி, திரளான பக்த ஜனங்கள் கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம், ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள் கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில், (9) திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா, (11) திருவாடானை, நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர், (13) திருவேடகம், நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14) பழமுதிர்ச்சோலை, தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை (15) பொதியமலை, என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே, (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில் காட்சி தந்தவனே, செம்மையான உபதேசச் சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம், சிறந்த (18) திருவாவினன்குடி - பழநி, (19) குன்று தோறாடல், இவையுடன் பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில், விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை, ஆகிய தலங்களில் அமரும் சிறந்த செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே, சோழநாட்டின் தலைநகராகிய வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பாநதி தீரத்தில் உள்ள (23) காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி விளங்கும் அழகனே, சங்குகள் உலவும் காவேரி ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும், (25) திருச்சிராப்பள்ளி மலையில் வாழ்கின்ற தேவ சேனாபதியே, (26) வயலூர்ப் பெருமானே, நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர், நீ நடனம் புரிந்த தலமாம் அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே, பாவத்தைத் தொலைக்கும் (29) திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே, கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய மார்பனே, எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும், தேவலோகத்து ஸரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகிய இவர்கள் யாவரும் தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன் நின்று, பொருந்திய துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு, குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும் ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும் பெருமாளே. 
குறிப்பு: முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது.(1) கும்பகோணம் - காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம்,(2) திருவாரூர் - சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்,(3) சிதம்பரம் - பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் - நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை,(4) சீகாழி - சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்,(5) மாயூரம் - பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம்,(6) சிவகாசி - பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம்,(7) ராமேஸ்வரம் - சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்,(8) வைத்தீஸ்வரன்கோயில் - முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம்,(9) திருப்பரங்குன்றம் - ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,(10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா - பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல்,(11) திருவாடானை - மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம்,(12) திருச்செந்தூர் - ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல்,(13) திருவேடகம் - சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம்,(14) பழமுதிர்ச்சோலை - மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு,(15) பொதியமலை - பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்,(16) பூரி ஜெகந்நாதம் - ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்,(17) திருவேரகம் - சுவாமிமலை - தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு,(18) திருஆவினன்குடி - பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு,(19) குன்றுதோறாடல் - பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு,(20) மூதூர் - திருப்புனவாயில் - வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது,(21) விரிஞ்சை - விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது,(22) வஞ்சி - சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது,(23) கம்பை மாவடி - காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்,(24) காவேரி சங்கமுகம் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) - சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர், (2 கோயில்கள் - பல்லவனீச்சரம், சாயாவனம் - இவை வைப்புத்தலங்கள்).(25) சிராமலை - திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம்,(26) வயலூர் - திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம்,(27) திருப்போரூர் - செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம்,(28) சிவாயம் - வாட்போக்கி - குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம்,(29) திருக்கண்டியூர் - தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம்.
* உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உள்ள கடவுள் முருகனே என ஸ்வாமிகள் சொல்வதன் மூலம் உலகில் எல்லா மதத்துக் கடவுளும் ஒருவனே என்ற அவரது பரந்த கொள்கை தெரிகிறது.

பாடல் 1307 - பழமுதிர்சோலை 
ராகம் - ஸிந்துபைரவி / பூர்விகல்யாணி தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி 
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் 
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே 
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் 
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே 
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே 
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே 
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைப்பவன் ஆகி திருமால் என்னும் காப்பவன் ஆகி சிவன் என்னும் அழிப்பவனாகி அம்மூவருக்கும்மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமை தரும் பொருளாகி வருபவனே இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே (அதே ஒலி) என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் 1308 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தனதன தான தான தனதன தான தான     தனதன தான தான ...... தனதான

இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார     இளநகை யாட ஆடி ...... மிகவாதுற் 
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால     இணைமுலை மார்பி லேற ...... மதராஜன் 
கலவியி லோடி நீடு வெகுவித தாக போக     கரணப்ர தாப லீலை ...... மடமாதர் 
கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது     கருதிய ஞான போத ...... மடைவேனோ 
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி     குலிசகு டாரி யாயி ...... மகமாயி 
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி     குணவதி யால வூணி ...... யபிராமி 
பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக     பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே 
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர     பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே.

இலவம் பூ போன்ற சிவந்த வாயிதழ்களை வேண்டுமென்றே அசைத்து, முறையாக மன்மதக் கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக தர்க்கங்களைப் பேசி, எதிரில் தாக்கும், அச்சத்தைத் தரும், கனத்த, கஸ்தூரி முதலியவைகளை அணிந்த, ஆடம்பரமான இரு மார்பிலும் பொருந்தும்படி மன்மத ராஜனுடைய காம லீலைச் சேர்க்கையில் வேகத்துடன் ஓடி, பலவிதமான போக சுகத்தை உண்டுபண்ணும் காமபோக புணர்ச்சியில் பேர் பெற்ற லீலைகளுடன் இளமை பொருந்திய விலைமாதர்களுடைய கலவியில் முழுகி அழுந்தியிருக்கும் இழிந்த தொழிலை உடைய அடியேனும், மேலாகக் கருதப்பட்ட ஞான அறிவை அடைவேனோ? கொலைத் தொழில் புரியும் காளி, சூலாயுதத்தை உடையவள், பைரவி, நீல நிறத்தினள், வனத்தில் வாழும் துர்க்கை, குலிஜம், அங்குசம் இவற்றை ஏந்திய தாய், மகமாயி, குமாரி, வராகி, மோகி, பகவதி, ஆதி ஜோதி, குணவதி, ஆலகால விஷத்தை உண்டவள், அழகி, பலி ஏற்கும் பிரம கபாலத்தினள், யோகத்தினள், பரமரைத் திருமணம் புரிந்தவள், உலகில் சிறந்த பத்தினி, வேத ஞானி (ஆகிய பார்வதியின்) மகனே, தனது சேனைகளுடன் சூரன் (போர்க்களத்தில்) இறக்கும்படி துணிவுடன் எதிர்த்துச் சென்ற சூர தீரனே, பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 1309 - பழமுதிர்சோலை 
ராகம் - ஹம்ஸத்வனி தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தானதன தான தந்த ...... தனதான

காரணம தாக வந்து ...... புவிமீதே   காலனணு காதி சைந்து ...... கதிகாண      நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத         ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே 
ஆரமுத மான தந்தி ...... மணவாளா   ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே      சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா         சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.

ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து, காலன் என்னை நெருங்காதபடிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வருவாயாக. நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே. 

பாடல் 1310 - பழமுதிர்சோலை 
ராகம் - ஸிம்மேந்திரமத்யமம் தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்     சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் 
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று     தேடினது போக என்று ...... தெருவூடே 
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்     மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் 
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்     மாயவினை தீர அன்பு ...... புரிவாயே 
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி     சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை 
சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த     தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா 
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று     ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர 
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த     ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே.

நற்குணவதியான தாய், தகப்பன், மனைவி, வீடு, மக்கள், சம்பாதித்த பொருள் இவைகளின் மேல் ஆசையால் மனம் தடுமாற்றத்தை அடைந்து, கெடுதலைத் தருவதான மயக்கத்தில் வீழ்ந்து, இந்த வாழ்வே நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணி தேடிச் சம்பாதித்த பொருள் அத்தனையும் தொலைந்து போகும்படியாக, நடுத்தெருவில் இளம் வயதுள்ளவர்களாக, மார்பகம் மலைபோன்றும், நெற்றி பிறைச்சந்திரனைப் போலவும் உள்ள பொது மகளிரின் மீது மோகத்தால் அடியேனது மனம் நோகாமல், என்றும் வாழ்கின்ற மயிலின் மிசை நீ வந்து உன் பாத கமலங்களில் பணிகின்ற எந்தன் மாயவினை அழியும்படியாக அருள் புரிவாயாக. சேல் மீன்கள் மிகுந்த நாடு, அன்னங்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மதில்கள் வானிலுள்ள நிலவை எட்டும் செம்பொன்னாலான மணிமேடைகள் இவையெல்லாம் கூடிய இந்திரபுரி போன்றது எங்கள் ஊர் என்று சொல்லும்படி மகிழ்ச்சியான வாழ்வு கொண்டிருந்த ¨தரியம் மிகுந்த சூரனைவென்ற வலிமை மிக்க வீரனே, ஆலகால விஷத்தை உண்ட நீலத் தழும்பு உள்ள கண்டத்தை உடையவரும், நீண்ட கனகசபையில் அழகுடன் நடனம் புரிகின்றவரும் ஆகிய பரமேசுவரனாம் உனது தந்தை மகிழ்ச்சி மிகவும் அடையும்படியாக சிறந்ததான உபதேச மொழியை உபதேசித்து பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் கந்தனே, ஆதி முதல்வனாக வந்த பெருமாளே. 

பாடல் 1311 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்     வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே 
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்     வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப் 
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு     பாதகனு மாகி நின்று ...... பதையாமல் 
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை     பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ 
பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்     பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே 
பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த     பூவைவடி வானு கந்த ...... மருகோனே 
சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து     தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா 
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து     சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

வீரம் வாய்ந்த மன்மதனுடைய காம சாஸ்திர நூலில் சொல்லப்பட்ட போகத்தைத் தரும் அழகிய மாதர்களுடைய வேல் போன்ற கூரிய கண்களால் மயக்கம் அடைந்து, இப்பூமியின் மேல் அன்பான பேச்சுக்களைப் பேசும் அப் பொது மகளிர் வாயினின்றும் பிறக்கும் இன்பச் சொற்களுக்கு இணங்கி அவர்கள் இட்ட வேலைகளை கைகளை வீசிச் செய்து, அவர்கள் மேல் மையல் மிகுந்து மோகாவேசனனாகி அங்கு மிக்கிருந்த பொருள் யாவும் செலவழித்த பின்னர் பாதகனாய் நின்று தவிக்காமல், மனப் பக்குவ நிலை வருவதற்கு, கடப்ப மலர் சூடியுள்ளதும், தண்டை அணிந்ததுமான திருவடி மலரை மிக்க அன்பினால் விரும்பித் தேடி என்றைக்கு உன்னைப் பணிவேனா? என்றும் முழுமையாக இருக்கும் சந்திரனை சடையில் அணிந்துள்ள சிவபெருமானின் இடது பாகத்தைக் கொண்ட பார்வதியின் திருவருளால் வளர்ந்த குழந்தை முருகனே, மண்ணுலகம் எல்லாம் முழுமையாக ஓரடியால் அளந்த காயாம்பூ வண்ணனாகிய திருமால் மகிழும் மருகனே, சூரர்கள் கூட்டங்களை அழித்து அவர்களுடைய கனத்த முடிகளை வெட்டிப் பொடியாகும்படி சாம்பலாகக் கண்ட கூரிய வேலனே, சோலையில் பறந்து உலாவுகின்ற மயிலின் மேல் ஏறி வந்து பழமுதிர்ச்சோலை மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 1312 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த     தானதன தந்த தந்த ...... தனதான

வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து     மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய 
வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த     மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் 
பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து     பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் 
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து     பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே 
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்     ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி 
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை     யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் 
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற     சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் 
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற     சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.

(இவர்களது மார்பகங்களை) யானைக்கு ஒப்பிடலாம் என்றால், அதன் முகம் ஒரு காலத்தில் (சிவபெருமானால்) கிழிபட்டு விழுந்தது. அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது. பெரிய மலையாகிய கயிலையை ஒப்பிடலாம் என்றால் அது (ராவணனால்) அசைக்கப்பட்டது. மன்மதனுடைய கி¡£டத்துக்கு ஒப்பிடலாம் என்றால் அது (சிவ பெருமான் எரித்த போது) சாய்ந்து விழுந்தது. சக்ர வாள கிரி போல, தேவ லோகம் அண்ட கோளம் இவைகளை எட்டும்படி நிமிர்ந்து எழுந்து, பெரிய தவசிகளும் தரும நெறியைக் கைவிட்டு நிலை குலைய, பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று, குளிர்ந்த சந்தனக் கலவையை அணிந்து, காமப் போரை விரும்பும் மார்பகங்களை உடைய விலைமாதர்களின் இன்பப் படுக்கையை விட்டு நீங்கி, உனது கூத்துக்கு இயன்ற திருவடியை வணங்கி, அதைப் பூஜிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் வருமோ? வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக் கணக்கான மடங்களும், தவங்கள் வேள்விச் சாலைகள் விளங்குகின்ற நிறைவான வீதிகளும், பல கிளைகளாகப் பரந்து வரும், நூபுரம் ஒலிக்கும் ஆகாய கங்கையாகிய சிலம்பாறு அமைதியாக வந்து ததும்பி ஒலிக்கும் படித்துறைகளும் பொருந்த, தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரங்களும், நெருங்கி நின்று சூழ்ந்துள்ள முத்து மணிகள் பதித்த பொலிவுள்ள மண்டபங்களும், சூரியனைப் போல சோதி மிகுந்த அழகிய பொன் மாளிகைகளும் விளங்கும் சோலை மலையில் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* நூபுரம் இரங்கு கங்கை - சிலம்பாறு பாயும் தென்திருமாலிருஞ் சோலையைக் குறிக்கும்.

பாடல் 1313 - பழமுதிர்சோலை 
ராகம் - பீம்பளாஸ் தாளம் - அங்கதாளம் - 9 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1

தான தானதன தத்ததன தத்ததன     தான தானதன தத்ததன தத்ததன          தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி     வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி          ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை 
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி     யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத          ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத 
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக     மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு          மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே 
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற     மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்          யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் 
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்     வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்          மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி 
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை     வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்          மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே 
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி     ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்          காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை 
காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு     நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்          காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.

திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட, இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு* விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான** (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி, வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய, (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஸஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன், புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள்*** எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக. குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி, பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது, பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள், என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே, காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும், (மேலும்) உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
(*3) அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:1. இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள் வெ·காமையுடன் புலன் அடக்குதல்.2. நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள், சைவ சித்தாந்த ஞானம், யாகம்.3. ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர, கோமுக ஆசனங்கள்.4. ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி ஆளும் முறை.5. ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை உள்முகமாகப் பார்த்தல்.6. தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.7. தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள் - இவற்றை அடக்கி தியானித்தல்.8. சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில் சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.(ஆதாரம் 'திருமந்திரம்', திருமூலர் அருளியது).

பாடல் 1314 - பழமுதிர்சோலை 
ராகம் - தேநுக தாளம் - திஸ்ரத்ரிபுடை

தனனாதன தானன தத்தன     தனனாதன தானன தத்தன          தனனாதன தானன தத்தன ...... தனதான

கருவாகியெ தாயுத ரத்தினி     லுருவாகவெ கால்கையு றுப்பொடு          கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் 
கையிலேவிழ வேகிய ணைத்துயி     லெனவேமிக மீதுது யிற்றிய          கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் 
தருதாரமு மாகிய சுற்றமு     நலவாழ்வுநி லாதபொ ருட்பதி          சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத 
சதுராயுன தாளிணை யைத்தொழ     அறியாதநிர் மூடனை நிற்புகழ்          தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே 
செருவாயெதி ராமசு ரத்திரள்     தலைமூளைக ளோடுநி ணத்தசை          திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் 
திகுதாவுண வாயுதி ரத்தினை     பலவாய்நரி யோடுகு டித்திட          சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா 
அருமாமறை யோர்கள்து தித்திடு     புகர்வாரண மாதுத னைத்திகழ்          அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே 
அழகானபொன் மேடையு யர்த்திடு     முகில்தாவிய சோலைவி யப்புறு          அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே.

கருவாய் அமைந்து தாயின் வயிற்றினில் உருவம் பெற்று, கால் கை என்ற உறுப்புக்களுடன் இனிய வாய், கண்கள், மூக்கு, உடல், செவி என்ற அங்கங்களுடன் மருத்துவச்சியின் கைகளிலே விழும்படியாக பிறந்து வந்து, படுக்கையில் படுத்துக்கொள் என்று மிகவும் பாராட்டித் தூங்கச்செய்த, அக்கரையோடு கவனிக்கும் தாயின் முலையில் நிறைந்த அமுதம் போன்ற பாலைப் பருகி இனியனாக வளர்ந்து, தனக்கென்று வாய்த்த மனைவி, உடன் அமைந்த உறவினர்கள், நல்ல வாழ்வு, நிலைத்து நிற்காத செல்வம், ஊர், இவையெல்லாம் நிலைத்து நிற்கும் எனக் கருதி, உன்னை நினைத்துப் பார்க்காத சாமர்த்தியம் உடையவனாய், உன்னிரு பாதங்களைத் தொழ அறியாத முழு மூடனாகிய என்னை, உன் புகழை ஓதி உண்மை ஞானத்தை அடையச்செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ? போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுரர் கூட்டங்களின் தலை, மூளை, சதை, இறைச்சி இவைகளை தேகக் கொழுப்பும் சத்துத் தாதுக்களும் உள்ள பூதகணங்களுடன் வருகின்ற பேய்கள் திகுதிகுவென்று உணவாக உண்ண, பெருகும் ரத்தத்தை வெகுவாக வந்த நரிகள் குடித்திட, சில கோட்டான்கள் தாமும் அங்கு நடனமாட, போர் செய்த தீரனே, அரிய சிறந்த வேதநெறியாளர்கள் துதித்துப் போற்றுகின்ற, யானை வளர்த்த மகள், அழகிய தேவயானைத் தேவியையும், விளங்கும் வண்டுகள் (பூவிலுள்ள தேனுக்காக) மொய்க்கும் கூந்தலை உடைய குறத்தி வள்ளியையும் தழுவுகின்றவனே, அழகிய பொன்மயமான மாடங்களின் உச்சியில் தங்கும் மேகங்களைத் தொடும் உயரமான சோலைகளும், அற்புதமான, சலனமற்ற பழமுதிர்ச்சோலை* என்னும் மலையில் வீற்றிருப்பவனே, அன்பர்கள் போற்றுகின்ற பெருமாளே. 
* பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.

பாடல் 1315 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தானதத்த தான தனாதனா தன     தானதத்த தான தனாதனா தன          தானதத்த தான தனாதனா தன ...... தனதானா

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் 
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு          தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் 
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென          மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி 
வாடைபற்று வேளை யடா வடா வென     நீமயக்க மேது சொலாய் சொலா யென          வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே 
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்          பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே 
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு          பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா 
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென          போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி 
பூமியுக்க வீசு குகா குகா திகழ்     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்          பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.

அழகு மிக்க உடல் பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க, கால் சிலம்பின் ஓசை கலீர் கலீர் என்று ஒலிக்க, இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற விலைமாதர்கள் சிலரும், கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில பெண்களும், நூறு லக்ஷ கோடி அளவில் மிகப் பலத்த மோகத்தோடு தேடி வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின் நெஞ்சம் எல்லாம் பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச, அதைக் கண்டு மனக் கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க, அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று நினைவானது ஓடி, (அந்தக் காமப் பித்தக்) காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக் கூவி அழைத்து, உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி, நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள் புரிவாயாக. பாரதத்தை மேரு மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி தமது தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானைமுகத்தவரும், சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே, பாக்கள் சிறப்புடனும் அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று, சிறந்த அகத்திய முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே, போரில் மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று, நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன் (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே, குகனே, விளங்கும் சோலை மலையில் வீற்றீருக்கும் தெய்வமே, தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட (6 + 6 = 12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே. 

பாடல் 1316 - பழமுதிர்சோலை 
ராகம் - சங்கராபரணம் தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12

தனன தான தான தத்த     தனன தான தான தத்த          தனன தான தான தத்த ...... தனதான

துடிகொ ணோய்க ளோடு வற்றி     தருண மேனி கோழை துற்ற          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் 
துறைக ளோடு வாழ்வு விட்டு     உலக நூல்கள் வாதை யற்று          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே 
உடல்செய் கோர பாழ்வ யிற்றை     நிதமு மூணி னாலு யர்த்தி          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே 
உருவி லாத பாழில் வெட்ட     வெளியி லாடு நாத நிர்த்த          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ 
கடிது லாவு வாயு பெற்ற     மகனும் வாலி சேயு மிக்க          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் 
களமு றானை தேர்நு றுக்கி     தலைக ளாறு நாலு பெற்ற          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே 
முடுகு வீர சூர பத்மர்     தலையின் மூளை நீறு பட்டு          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா 
முநிவர் தேவர் ஞான முற்ற     புநித சோலை மாமலைக்குள்          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.

துடிதுடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றிப் போய், இளமையாக இருந்த மேனியில் கபமும் கோழையும் மிகுந்து, இருமலும், காச இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி, இல்லறம், துறவறம் என்ற வகைப்படும் இந்த வாழ்வை விட்டு, உலகிலுள்ள சாத்திர நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி, சுகத்தைத் தரும் சுய அனுபவம் அடைந்து மகிழாமல், உடலை வளர்க்கும் கோரமான பாழும் வயிற்றுக்கு நாள்தோறும் உணவு வகைகளைத் தந்து உடலைக் கொழுக்கச் செய்து, வெறும் ஆயுளை நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ? உருவம் கடந்த பாழ்வெளியில் ஆகாயமாகிய வெட்டவெளியில் இசையுடன் ஆடுகின்ற நடனனே, உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ? வேகமாகத் தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன் அங்கதனும் நிரம்ப மலைகளைக் கடலின் மீது போட்டுக் கட்டிய அணைவழியாக பகைவனது ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும், தேர்ப்படையையும் தூளாக்கி, பத்துத் தலைகள் கொண்ட ராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் ராமனின் மருகனே, வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின் தலைகளில் உள்ள மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற, (துடிக் கூத்து) நடனம் ஆடிய மயிலின் மீதமர்ந்த வீரனே, முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்**) வீற்றிருக்கும் வேல் முருகனே, தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே. 
* சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய பூதகணங்கள் கருடன் முதலிய வாகனங்களுக்குப் பெருந் தொல்லை தந்தமையால் முருகனால் அசுரர்களாக ஆகுமாறு சபிக்கப்பட்டனர். சாபம் நீங்கும்போது அவரவர்கள் விரும்பியபடியே சிங்கமுகன் துர்க்கைக்கு சிம்மவாகனமாகவும், தாரகன் ஐயனாருக்கு யானை வாகனமாகவும், சூரன் கந்தனுக்கு மயில் வாகனமாகவும், பத்மன் முருகனுக்குச் சேவற்கொடியாகவும் ஆனார்கள் - கந்த புராணம்.
** பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.

பாடல் 1317 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தானத் தானன தத்தன தத்தன     தானத் தானன தத்தன தத்தன          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்     நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்          பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் 
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்     சீவிக் கோதிமு டித்தள கத்திகள்          பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத 
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி     நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்          மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக 
வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள்     நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்          மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ 
தேசிக் கானக முற்றதி னைப்புன     மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்          சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா 
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித     மாகத் தூதுசெ லத்தரில் கற்பக          தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே 
ஆசித் தார்மன திற்புகு முத்தம     கூடற் கேவைகை யிற்கரை கட்டிட          ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ 
டாரத் தோடகி லுற்றத ருக்குல     மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய          ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே.

(தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த) பாசத்தால் அதற்குரிய விலை பேசி முடிவு செய்யும் விலைமாதர்கள். தம்மை விரும்புவர்களின் மனதை மயக்குபவர்கள். கனத்த மலையை ஒத்த மார்பகத்தை உடையவர்கள். மிகவும் பாவ வினையின் காரணத்தால் உடலை எடுத்த வியாபாரிகள். சீவி, ஆய்ந்து முடிந்து கொண்ட கூந்தலை உடையவர்கள். பார்வையாலேயே மோகத்தை எழுப்பும் துஷ்டர்கள். நீங்காத அழுக்கைப் பற்றி ஏறிய பித்தளை ஆபரணங்களை சாம்பலிட்டு பளபளப்பு உறும்படி விளக்கி வைத்துள்ளவர்கள். மார்பிலும் காதிலும் அந்த ஆபரணங்களை அணிந்து தளுக்கு செய்பவர்கள். மிகவும் காமத்தைக் காட்டி, வாய் விரிவாகப் பேசும் பொய்யர்கள். நட்பு செய்து யாரையும் வஞ்சித்து வடிகட்டுபவர்கள். இத்தகையோரின் மாயைச் செயலுக்கே மனத்தைச் செலுத்தி அந்த மாயையுள் நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ? (வள்ளிமலையின்) அழகிய காட்டில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று காவல் இருந்து, (பறவைகளை விரட்ட) கவண் வீசி கல்லைச் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப் பெண் வள்ளி மனம் மகிழும் கணவனே, (தலங்கள் தோறும்) தேடிச் சென்று பாடிய சொல் வன்மை படைத்த புலவராகிய சுந்தரருக்கு இன்பம் தர (பரவை நாச்சியாரிடம்) தூதாகச் சென்ற தந்தை சிவபெருமான் பெற்ற கற்பகமே, தேவர்களுக்கு முதல்வனே, சீகாழியில் திருஞானசம்பந்தராக அவதரித்தவனே, விரும்பி வாழ்த்துவோருடைய உள்ளத்தில் புகும் உத்தமனே, மதுரையில் வைகையில் (வெள்ளம் வர) அணை கட்ட கூலி ஆளாக ஒப்புக் கொண்டு உதிர்ந்த பிட்டமுதுக்காக (பிரம்பினால்) அடி பட்ட சொக்கநாதரோடு, சந்தன மரமும் அகில் மரமும் உள்ள மரக் கூட்டங்கள் மேகம் வரை உயர வளர்ந்து சம்பந்தப்பட்டு நெருங்கிய பழைய பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 1318 - பழமுதிர்சோலை 
ராகம் - சக்ரவாஹம் / குந்தலவராளி தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தானதன தந்த தானதன தந்த     தானதன தந்த ...... தனதான

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்     மாயமதொ ழிந்து ...... தெளியேனே 
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து     மாபதம ணிந்து ...... பணியேனே 
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்     ஆறுமுக மென்று ...... தெரியேனே 
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட     தாடுமயி லென்ப ...... தறியேனே 
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு     நானிலம லைந்து ...... திரிவேனே 
நாகமணி கின்ற நாதநிலை கண்டு     நாடியதில் நின்று ...... தொழுகேனே 
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற     சோகமது தந்து ...... எனையாள்வாய் 
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று     சோலைமலை நின்ற ...... பெருமாளே.

வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே. நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே. முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும் ஆறுமுகம்* என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே. ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூபநிலை கொண்டது ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே. நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால் உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே. குண்டலினியாக ஓடும் பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து** விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே. அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற (ஸா + அகம்) அதுவே நான் என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய். சூரர் குலத்தை வென்று வெற்றியோடு போய் பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆறுமுகம் என்ற தத்துவம்:1. அ, உ, ம், நாதம், விந்து, சக்தி.2. சிவனது ஐந்து முகங்களும் தேவியின் ஒரு முகமும்.3. ஆதி, இச்சா, கிரியா, பரா, ஞான, குடிலா சக்திகள் என்ற ஆறு சக்திகள்.4. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்கள்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1319 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி     மாயநம னுக்கு ...... முறவாகி 
மாதவம ழித்து லீலைகள் மிகுத்து     மாவடுவை யொத்த ...... விழிமாதர் 
சீருட னழைத்து வாய்கனிவு வைத்து     தேனித ழளித்து ...... அநுபோக 
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து     சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ 
வாரினை யறுத்து மேருவை மறித்து     மாகனக மொத்த ...... குடமாகி 
வாரவணை வைத்து மாலளித முற்று     மாலைகளு மொய்த்த ...... தனமாது 
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி     தோகையுமை பெற்ற ...... புதல்வோனே 
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து     சோலைமலை யுற்ற ...... பெருமாளே.

நீண்ட குண்டலத்தை எட்டியும், மன்மதனைக் கூட மருட்சியுறச் செய்தும், மாயத்தில் வல்ல யமனுடன் உறவு பூண்டும், நல்ல தவ நிலையை அழித்து, காம லீலைகள் அதிகமாகி, மாவடுவுக்கு நிகரான கண்களை உடைய விலைமாதர்கள், மரியாதையுடன் அழைத்து, வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி, தேன் போல் இனிக்கும் வாயிதழைத் தந்து, காம அநுபோகச் சேர்க்கையில் சிக்க வைத்து, மோசம் விளையும்படிச் செய்து, நன்மையை அழிய வைக்கும் வேசியர்களுடைய உறவு நல்லதாகுமோ? கச்சைக் கிழித்து மீறி, மேரு மலையையும் மிஞ்சி, சிறந்த பொன் குடம் போல் விளங்கி, அன்பாகிய ஆதரவை வைத்து, மிக்க அழகைக் கொண்டு, மாலைகளும் நெருங்கிய மார்பகங்கள் விளங்கும் மாது, கழுத்தணியாகிய (தோரை என்ற) அணி வடத்தைப் பூண்ட புயங்களை உடையவள், யோகினி, சாமர்த்தியம் நிறைந்தவள், மயில் போன்ற உமா தேவி பெற்ற புதல்வனே, சூரனையும் அவன் சுற்றத்தாரையும் அழித்து, வேலாயுதத்தைக் கையில் ஏந்தி சோலை மலையாகிய பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 1320 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தனன தனதன தனத்தத் தாத்த     தனன தனதன தனத்தத் தாத்த          தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான

அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி     விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி          அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக 
அவச இதமொழி படித்துக் காட்டி     அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி          அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம் 
ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி     எழுத வரியிடை வளைத்துக் காட்டி          உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி 
உருகு கடிதட மொளித்துக் காட்டி     உபய பரிபுர பதத்தைக் காட்டி          உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ 
முழுகு மருமறை முகத்துப் பாட்டி     கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட          முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா 
முடுகு முதலையை வரித்துக் கோட்டி     அடியர் தொழமக வழைத்துக் கூட்டி          முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர் 
பழைய கடதட முகத்துக் கோட்டு     வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு          பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர் 
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு     குமர குலமலை யுயர்த்திக் காட்டு          பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.

அழகு விளங்கும் கூந்தலை விரித்துக் காட்டியும், கண்களின் கடைப் புறம் இரண்டையும் சுழற்றிக் காட்டியும், அழகிய பொன்னாலாகிய ஆபரணங்களையும் குண்டலங்களையும் விளக்கமுறக் காட்டியும், காமத்தை விளக்க வல்லதும் தன் வசம் இழக்கச் செய்வதுமான இனிய பேச்சுக்களை பேசிக் காட்டியும், வாயிதழின் செம்மை இழந்த பவளம் போன்ற வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகக் குறி இட்டு அழுத்தினதைக் காட்டியும், அழகிய முத்து வடம் தொங்கும் இரண்டு மார்பகங்களை அசைத்துக் காட்டியும், எழுதுவதற்கு அரிய இடுப்பை வளைத்துக் காட்டியும், அணிந்து உலவி வரும் புடவையை தளர்த்திக் காட்டியும், நட்புப் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், உள்ளத்தை உருக வைக்கும் பெண்குறி இடத்தை மறைப்பது போல் காட்டியும், இரண்டு சிலம்பு அணியும் பாதங்களைக் காட்டியும், உயிரையே விலைக்குக் கொள்பவராகிய அந்த விலைமாதர்கள் மேலுள்ள விருப்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? அரிய வேதங்களில் வல்லவளான பெரியவளின் (ஸரஸ்வதி - வேத முதல்வி) கணவராகிய பிரமனின் குடுமியை அறுத்துப் போட்ட முதல்வனே, குகைகள் அமைந்த பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழியும்படி கோபித்தவனே, இறைவன் திருவருளை நாடி, விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, சூழ்ந்த அடியார்கள் துதிக்க, பிள்ளையை பெற்றோர்களிடம் சேர்ப்பிக்க (பிள்ளையை உயிரோடு தா என்று) முறை இட்ட சுந்தரர் பாடிய தமிழ்த் தேவாரத்தை* அன்பு பெருக்குடன் கேட்ட பழைய நீதிமான், பழைய மதம் பாயும் இடமாகிய முகத்தையும், தந்தத்தையும் உடைய யானையின் தோலை உரித்து அணிந்தவர், வேத மொழிகளைக் கூறும் பரம்பொருள், கங்கையைச் சடையில் சூடியுள்ள சிவபெருமான் உன்னைப் பணிய அவருக்குச் சிவ மயத்தை (பிரணவப் பொருளை) உபதேசித்த குமரனே, பழமுதிர்ச்சோலை மலையில் சிறப்புற்று விளங்கும், அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டும் பெருமாளே. 
* திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

பாடல் 1321 - பழமுதிர்சோலை 
ராகம் - யமுனா கல்யாணி - மத்யம ஸ்ருதி தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதன தத்தத் தனதன தத்தத்     தனதன தத்தத் தனதன தத்தத்          தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா

தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்     கலகலெ னப்பற் கட்டது விட்டுத்          தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித் 
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்     டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்          சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும் 
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்     திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்          தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ...... டுயிர்போமுன் 
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்     திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்          செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய் 
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்     புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்          கடுகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன் 
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்     திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்          களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே 
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்     குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்          குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே 
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்     சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்          குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே.

தலைமயிரானது கொக்கின் இறகு போல நரைத்தும், கலகல என்று பல்லின் கட்டுக்கள் யாவும் விட்டும், தளர்ந்த நடை ஏற்பட்டு, தத்தித்தத்தி அடிகளை வைத்தும், தடுமாற்றத்துடன் கம்பை ஊன்றித் தள்ளாடி நடந்தும், இருமல் தொடர்ந்து பெருகியும், உணவு தொண்டையில் அடைத்து விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், சளி அதிகரித்தும், பித்தமும் பலத்துப் போய், பலதடவையும் எள் எண்ணெயில் இட்டு ஒன்றுபட்டு எரிக்க கடுகு, நெல்லி, தான்றி ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலை, சுக்கு, திப்பிலி முதலியவற்றை இட்டு வறுத்து, தெளிவாக கஷாயத்தை வடிகட்டி வாய்க்குள் இட்டும், உடல் செத்துப்போய், உயிர் நீங்குவதற்கு முன்னாலே, விளக்கமுடைய உனது திருப்புகழைக் கற்று, அப்புகழுக்கு உண்டான சொற்களைப் பழகுமாறு செய்து, உன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு தொழுது வணங்கி, பிறப்பை அறுப்பதற்கு மேலான மோக்ஷத்திற்குத் திருவருளை அருள்வாயாக. சேணத்தை இறுக்கக் கட்டி, அங்கவடியை அமைத்து, குதிரைப் படையை நடத்தி, துதிக்கையை உடைய மலைபோன்ற யானைப்படையை வேகமாகச் செலுத்தி திடுமென ஓட்டிப் போர் செய்யும் சூரன் பெரும் சேனை அழிந்து போய், தடுக்கமுடியாமல் கைவிட்டு, அலைமோதும் கடலுக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, தாக்கி, செருக்குடன் கூடிய மயிலை அழகுறச் செலுத்தி போர் செய்யும் பெருமானே, வஜ்ராயுதப் படையுள்ள இந்திரன் மகளாம் தேவயானைக்குத் தப்பியும் குறவர் மகளாம் வள்ளிக்கு மனத்தைப் பறிகொடுத்தும், குளிர்ந்த தினை மிகுதியாக விளைகின்ற தினைப்புனத்திலே அலைந்து திரிந்தவனே, கொடுமையான கிரெளஞ்சமலையை வேலால் குத்தி அழித்து, போரை விளைவித்து, தானே மேலானவனாக நின்று, மேலான மலையிற் சென்று பொருந்தி வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப் பெருமாளே. 

பாடல் 1322 - பழமுதிர்சோலை 
ராகம் - ...; தாளம் -

தனதன தனந்த தான தனதன தனந்த தான     தனதன தனந்த தான ...... தனதான

மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ     மணபரி மளங்கள் வேர்வை ...... யதனோடே 
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க     வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின் 
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட     முகமுகமொ டொன்ற பாய ...... லதனூடே 
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு     முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே 
சிலைநுத லிளம்பெண் மோகி சடையழ கியெந்தை பாதி     திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா 
சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக     திகழயி லெறிந்த ஞான ......முருகோனே 
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள     குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா 
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான     குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே.

மலர்ப் படுக்கை அசைந்து கலைய, மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி சரிந்து விழ, நறு மணங்கள் வேர்வையுடன் ஒன்றுபட, விசாலமான கண்கள் அசைய, பிறை போலும் நெற்றி புரண்டு குங்குமம் கலைய, அலங்காரமாய் அணிந்த ஆடை நெகிழ்ந்து போக, இளநீர் போன்ற மார்பகங்கள் இரண்டும் அசைய, நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டம் கொள்ள, முகம் முகத்தோடு பொருந்த, படுக்கை அணையில் பெரிய மோகச் செயலில் கலந்து முழுகி (நான்) இன்புற்று இருந்தாலும், மாலைகள் அசையும் திருமுடி முதலான உனது வடிவத்தையும் அழகிய திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன். வில் போன்ற நெற்றியை உடைய இளம் பெண், ஆசையைத் தருபவள், அழகிய சடையை உடையவள், என் தந்தையாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் விளங்கும் மரகதம் போல் பச்சை நிறத்து அழகிய உருவினளாகிய உமா தேவியின் குழந்தையே, புன்னகை செய்து, சூரனும், மலையும், கடலும் எரிந்து போக, கையிலே திகழ்ந்த வேலை எறிந்த ஞான முருகனே, கொலைத் தொழிலை நன்றாகப் பயின்றிருந்த வேடர்கள் பெண்ணாகிய வள்ளி மணந்த தோளனே, நற் குணனே, கடப்ப மலர் மாலையை அணிந்த மார்பனே, மின்னல் கொடி போன்ற ஜோதியே, காலைக் கதிர் போல ஒளிவீசும் ஞானியே, (பழமுதிர்) சோலை மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 1323 - புதிய பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தான தனதன தான     தனதன தான ...... தனதான

கருவெனு மாயை உருவினில் மூழ்கி     வயதள வாக ...... நிலமீதில் 
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்     வெகுவித மாக ...... கவிபாடித் 
தெருவழி போகி பொருளெனு மாசை     திரவியம் நாடி ...... நெடிதோடிச் 
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி     சிறுவித மாக ...... திரிவேனோ 
அருளநு போக குருபர னேஉன்     அடியவர் வாழ ...... அருள்வோனே 
அரனிரு காதில் அருள்பர ஞாந     அடைவினை ஓதி ...... அருள்பாலா 
வெருவிடு சூரர் குலஅடி வேரை     விழவிடு சாசு ...... வதிபாலா 
மிடலுட லாளர் அடரசுர் மாள     விடுமயில் வேல ...... பெருமாளே.

தாயின் கருப்பையிலே மாயையான உருவத்திலே மூழ்கி காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு வந்த பின், உலகிலுள்ள கலை வல்லுனர்களின் பலவிதமான கலை நூல்களைப் பயின்று, அனேக விதமான கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று, பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி நெடும் தொலைவு ஓடி, வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் மோகத்திலே முழுகி, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள் ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே, அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான சக்தியின் குமரனே, வலிமையான உடலமைப்பு கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு செலுத்திய படையான வேலாயுதத்தை உடைய பெருமாளே. 

பாடல் 1324 - புதிய பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தந்த தனந்த தனத்த தானன     தந்த தனந்த தனத்த தானன          தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா

தங்க மிகுந்த முலைக்க டாமலை     பொங்க விரும்பி யமுத்து மாலைகள்          தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே 
சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு     மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர்          சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் 
கொங்கை குலுங்க வளைத்து வாயத     ரங்க ளருந்தி ருசிக்க வேமத          குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை 
கொண்ட வரிந்த விதத்தி னாடர     சங்கி லிகொண்டு பிணித்து மாமயில்          கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ 
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம்     வந்த துகண்டு பயப்ப டாதவர்          சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் 
சிங்க முகன்த லைவெட்டி மாமுகன்     அங்க மறுந்து கிடக்க வேவரு          சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா 
மங்கை மடந்தை கதிக்கு நாயகி     சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை          மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா 
மந்தி ரதந்தி ரமுத்த யோகியர்     அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள்          வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே.

பொன்னணிகள் மிக்கணிந்து, கடக்கமுடியா மலை போல விம்மிப் பெருகிய மார்பகத்தில் ஆசையுடன் அணிந்த முத்து மாலைகள் தங்கும்படியாக, கர்வத்தைக் காட்டும் விலை மகளிர். தங்கள் பேச்சினால் வந்தவரை மிகச் சஞ்சலம் அடையச் செய்து மயங்கவைத்து, ஒரு கட்டிலில் அவர்களுடன் சுகித்து இருந்து, மிகுந்த நறுமணம் உள்ள சந்தனத்தை அப்பி மகிழ்ந்து, நூலைப் போன்ற மெலிந்த இடுப்பு படுக்கையில் அசைவுற, அவர்களது மார்பகங்கள் குலுங்க, கழுத்தை வளைத்து, வந்தவரின் வாயிதழ்களைச் சுவைத்து ருசிக்க, மோகத்தை மூட்டும் குங்குமக் கலவை பூசிய கழுத்திலிருந்து குயிலின் ஓசையை வெளிப்படுத்தும் விலை மகளிர் இந்த விதமாக ஆடிட, தங்கள் கழுத்திலுள்ள சங்கிலியால் பிணித்து, அழகிய மயில் போல கொஞ்சி மகிழும் இந்த வறட்டு கர்வம் உடைய வீணிகளின் உறவு நல்லதாகுமா? சந்திரன் பிறந்த பாற்கடலில் ஆலகால விஷம் எழுந்தபோது அதைக் கண்டு சிறிதும் பயப்படாதவராகிய சிவபெருமான் (சூரனைக் கண்டு) மனம் நடுங்கி இருந்தபோது, உனது மயில் மீது ஏறி சிங்கமுகாசுரன் சிரத்தை வெட்டி, தாரகாசுரன் உடலின் அங்கங்களை அறுத்தெறிந்து, பாய்கின்ற சரபப் பக்ஷி போலச் சென்ற வேலினை உடைய குருநாதனே, தெய்வ மங்கை, மடந்தை, மோட்ச கதிக்கு நாயகி, சங்கரி, பேரழகி, யானை முகத்தவனாகிய கணபதியை மகனாகப் பெற்ற ஈஸ்வரி பார்வதி அருளிய பாலனே, மந்திர, தந்திரங்களில் வல்ல, முற்றும் துறந்த யோகியர் தங்களது செங்கைகளை சிரம் மீது கூப்பி அஞ்சலி செய்ய, அவர்களுக்கு கருணையுடன் அருள் பாலித்து அவர்களின் முன்வந்து (குடைக் கூத்து என்னும்) நடனத்தை ஆடி அருளிய பெருமாளே. 

பாடல் 1325 - புனவாயில் 
ராகம் - ரஞ்சனி தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்

தனனந் தந்தன தானன தந்தன     தனனந் தந்தன தானன தந்தன          தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான

உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது     விழியும் பஞ்சுபொ லானது கண்டயல்          உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால் 
ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது     முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது          உடலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி 
வரவொன் றும்பலி யாதினி என்றபின்     உறவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ          மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ...... இயல்தோகை 
மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய     வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித          வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் ...... வருவாயே 
அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள     கவியின் சங்கமி ராகவ புங்கவன்          அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன் 
அருளுங் கண்டத ராபதி வன்புறு     விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய          அகமும் பைந்தொடி சீதைம றைந்திட ...... வழிதோறும் 
மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள்     கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி          மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான 
மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண்     முழுதுங் கண்டந ராயணன் அன்புறு          மருகன் தென்புன வாயில மர்ந்தருள் ...... பெருமாளே.

பேச்சும் நின்றுவிட, நாவும் வறண்டு போய்விட, கண்களும் பஞ்சடைந்தன போல ஆகிவிட, இவற்றைக் கண்டு வருத்தம் அடையும் உறவினர்கள் வாயிலே விட்ட பால் உள்ளே இறங்காமல் தேங்கி நிற்க, கடைவாயிலிருந்து பால் ஒழுக, துயரம் மிகுந்த உடம்பு குளிர்ந்து போக, முடங்கிய கைகளும் கால்களும் யமனுடைய பாசக்கயிற்றைக் கண்டு நிமிர்ந்திட, பருத்த உடலும் தொந்தியும் இளைத்து வேகமாக வடிந்து போக, வைத்தியர் வந்து பார்த்து இனிமேல் ஒரு வைத்தியமும் பலிக்காது என்று கூறிவிட்ட பின்பு சுற்றத்தாரும் பெண்களும் உடலின் மீது விழுந்து முட்டிக்கொண்டு அழ, யமன் இங்கு வந்து என் உயிரைக் கொண்டு போகின்ற நாளில் அழகிய தோகை மயிலும், பன்னிரு திருக்கரங்களும், பன்னிரு வலிய தோள்களாம் குன்றுகளிலே தவழும் வாசமிகு கடப்ப மாலையும், பண்பு மிகுந்த, காட்டு மின்னல் போன்ற வள்ளி, தேவயானை ஆகியோருடன் என் முன்னால் நீ வர வேண்டும். சூரியனின் மைந்தனான சுக்¡£வன் புகழ் மிக்க வானர மந்திரியாகிய மாருதியினிடத்தில் இராகவனாகிய மரவுறி தரித்தவனது அறிவின் திறத்தைக் கண்டு அருள்வாய் என்று அன்போடு அனுப்ப, அநுமன் இராமனின் அருளைக் கண்டு, மேலும் கூறினான் "அந்த அண்டத்து அதிபதி (இராவணன்) வலுக்கட்டாயமாக (சீதையை அபகரித்து) வானில் புஷ்பக விமானத்தில் கொண்டு செல்லும்போது, மனம் வருந்தி வாயாரப் புலம்பிய பசுங்கொடி போன்ற சீதையும் மறைவாக, சென்ற வழியில் எல்லாம், தான் அணிந்திருந்த நகைகளாகிய குண்டலம், வளைகள், சிலம்புகள், கொலுசு, பொன் சதங்கை, மாலைகள், மணிகள் ஆகியவற்றைப் பந்து போல் வீசி எறிந்தாள், அந்த நகை மூட்டை இதுதான்" என்று தந்திட, மேரு மலை அளவுக்கு உயர்ந்து பக்கத்தில் தொடராக உள்ள வானம் அனைத்தையும் (திரிவிக்ரமாவதாரத்தில்) பாதத்தால் அளந்த நாராயணனாம் திருமால் மிகவும் அன்பு கொண்ட மருகனாம், தென் திசையில் உள்ள புனவாயில்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 'புனவாயில்' என்ற ஊர் இப்பொழுது 'திருப்புனவாசல்' என்று விளங்குகின்றது.

பாடல் 1326 - திருவெழுகூற்றிருக்கை 
ராகம் - தர்பாரிகானடா தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்

ஓருரு வாகிய தாரகப் பிரமத்     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை 
இருபிறப் பாளரி னொருவ னாயினை     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் 
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து          மூவரும் போந்து இருதாள் வேண்ட               ஒருசிறை விடுத்தனை 
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை 
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை 
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்               அறுகு சூடிக் கிளையோ னாயினை 
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்          கொருகுரு வாயினை 
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை 
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை 
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற          ஏரகத் திறைவ னென இருந்தனையே.

[குறிப்பு: இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு. 
                                            1                                         1 2 1                                      1 2 3 2 1                                   1 2 3 4 3 2 1                                1 2 3 4 5 4 3 2 1                             1 2 3 4 5 6 5 4 3 2 1                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 
இடையில் தேர் தட்டு     . . . . . . . . . . . . . . . . . . . 
                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1                             1 2 3 4 5 6 5 4 3 2 1                                1 2 3 4 5 4 3 2 1                                   1 2 3 4 3 2 1                                      1 2 3 2 1                                         1 2 1                                            1

சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் .. (மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக)]. 
தேர் படத்தைக் காண இங்கே சொடுக்கவும் 

தேர் படத்தின் பிரதியை பதிவிரக்க இங்கே சொடுக்கவும் (302kb zip file) 

ஒரு (1) பொருளாகிய பிரணவமாம் முழுமுதலின் (சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில், சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும் அமைந்து, அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து, சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி, மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு விளங்குகிறாய். (உபநயனத்துக்கு முன்னும் பின்னும்) இரு (2) பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில் ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய திருஞானசம்பந்தராய் அவதரித்தாய். (ஓரா - இரு பொருள் - ஒன்று -1- மற்றும் தெரியாமல்) பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக, (இருமை - இரு பொருள் - இரண்டு -2- மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில் (முன்னாள் = இரு பொருள் - மூன்று -3- மற்றும் முன்பொரு நாள்) நான்கு (4) முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால் குட்டிக்) கலைத்து, அரி, அரன், இந்திரன் ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில் பணிந்து முறையிட்டு வேண்ட, பிரமனை நீ அடைத்த ஒரு (1) சிறையினின்றும் விடுவித்தாய். ஒரு (1) நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி, மூன்று (3) பக்கங்களிலும் நீர் உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச (5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்), நீ உலகை வலம் வந்தாய். நான்கு (4) விதமான தந்தங்களை உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்), மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும், இரண்டு (2) காதுகளையும், ஒரு (1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய இந்திரனின் மகளாகிய தேவயானையை மணம் செய்து கொண்டனை. ஒரு (1) வகையான யானை வடிவிலே இள யானை, கிழ யானை என இரு (2) வடிவிலும் வரவல்லதும், கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத (3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு மூத்த சகோதரனாக* விளங்கினாய். (நால்வாய் = இரு பொருள் - நான்கு -4- மற்றும் வாயினின்று) தொங்கும் துதிக்கை முகத்தோனும், ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும், அறுகம் [அறுகம் = இரு பொருள் - ஆறு -6- மற்றும் அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு இளைய சகோதரன் என விளங்குகிறாய். நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின் மூலமாக நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன் என்று உணர்த்தப் பெறுபவரும், சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3) தம் கண்களாக உடையவரும், நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2) மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய். முன்பொரு (1) நாள் உமாதேவியின் இரு மார்பிலும் சுரந்த ஞானப்பாலைப் பருகி இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி, நால்வகைக் கவியிலும்** அரசனாகி, பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு அடிமைப்படாத உரிமையாளனாகி, ஆறு முகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற இளமை ததும்பும் அழகோடு சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத் தோன்றினாய். கார்த்திகைப் பெண்களாகிய ஆறு நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய். கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும் தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய். நான்கு மறைகளைப் போன்று மிக ரகசியமானதும், மூன்று பிரிவுகளோடு சிவந்த கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட மலையை இரண்டு கூறாகப் பிளக்குமாறு ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய். காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும் சரவணபவ என்னும் உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத கமலங்களைப் போற்ற, திருவேரகத்தின் இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய். * முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார்.அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.** தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 1327 - மதுரை 
ராகம் - ... ; தாளம் - ... ;

தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா 
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே 
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே 
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா 
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.

சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே, பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக. உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே, இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இது ஒரு துதிப்பாடல். வேண்டுகோள் எதுவும் இல்லாதது.

பாடல் 1328 - மங்களம் 
ராகம் - ... ; தாளம் - ... ;

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றேஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றேகுன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றேவள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

திருப்புகழ் முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.