LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-64

2.064.திருமுதுகுன்றம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம். 
சுவாமிபெயர் - பழமலைநாதர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
2157 தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் 
பெரியோனே 
ஆவா வென்றங் கடியார் தங்கட் 
கருள்செய்வாய் 
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா 
யென்றேத்தி 
மூவா முனிவர் வணங்குங் கோயின் 
முதுகுன்றே.
2.064. 1
அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையை பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும். 
2158 எந்தை யிவனென் றிரவி முதலா 
விறைஞ்சுவார் 
சிந்தை யுள்ளே கோயி லாகத் 
திகழ்வானை 
மந்தி யேறி யினமா மலர்கள் 
பலகொண்டு 
முந்தித் தொழுது வணங்குங் கோயின் 
முதுகுன்றே.
2.064.2
எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும். 
2159 நீடு மலரும் புனலுங் கொண்டு 
நிரந்தரம் 
தேடு மடியார் சிந்தை யுள்ளே 
திகழ்வானைப் 
பாடுங் குயிலி னயலே கிள்ளை 
பயின்றேத்த 
மூடுஞ் சோலை முகிறோய் கோயின் 
முதுகுன்றே.
2.064. 3
மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும். 
2160 தெரிந்த வடியார் சிவனே யென்று 
திசைதோறும் 
குருந்த மலருங் குரவி னலருங் 
கொண்டேந்தி 
இருந்து நின்று மிரவும் பகலு 
மேத்துஞ்சீர் 
முரிந்து மேகந் தவழுஞ் சோலை 
முதுகுன்றே.
2.064.4
அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும் விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும். 
2161 வைத்த நிதியே மணியே யென்று 
வருந்தித்தம் 
சித்த நைந்து சிவனே யென்பார் 
சிந்தையார் 
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் 
கொணர்ந்துந்து 
முத்தா றுடைய முதல்வர் கோயின் 
முதுகுன்றே.
2.064.5
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும். 
2162 வம்பார் கொன்றை வன்னி மத்த 
மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமா 
னுறைகோயில் 
கொம்பார் குரவு கொகுடி முல்லை 
குவிந்தெங்கும் 
மொய்ம்பார் சோலை வண்டு பாடு 
முதுகுன்றே.
2.064. 6
மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடிவகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முது குன்றாகும். 
2163 வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை 
வாழ்வேந்தை 
நாசஞ் செய்த நங்கள் பெருமா 
னமர்கோயில் 
பூசைசெய்து வடியார் நின்று 
புகழ்ந்தேத்த 
மூசி வண்டு பாடுஞ் சோலை 
முதுகுன்றே.
2.064. 8
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும். 
2164 அல்லி மலர்மே லயனு மரவின் 
அணையானும் 
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் 
சோதியூர் 
கொல்லை வேடர் கூடி நின்று 
கும்பிட 
முல்லை யயலே முறுவல் செய்யும் 
முதுகுன்றே.
2.064. 9
அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக்கொடிகள் அருகில் இருந்துகண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும். 
2165 கருகு முடலார் கஞ்சி யுண்டு 
கடுவேதின் 
றுருகு சிந்தை யில்லார்க்கயலா 
னுறைகோயில் 
திருகல் வேய்கள் சிறிதே வளையச் 
சிறுமந்தி 
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் 
முதுகுன்றே.
2.064.10
கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும். 
2166 அறையார் கடல்சூ ழந்தண் காழிச் 
சம்பந்தன் 
முறையான் முனிவர் வணங்குங் கோயின் 
முதுகுன்றைக் 
குறையாப் பனுவல் கூடிப் பாட 
வல்லார்கள் 
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் 
பிரியாரே.
2.064. 11
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார். 
திருச்சிற்றம்பலம்

2.064.திருமுதுகுன்றம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம். 
சுவாமிபெயர் - பழமலைநாதர். தேவியார் - பெரியநாயகியம்மை. 

2157 தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே.2.064. 1
அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையை பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும். 

2158 எந்தை யிவனென் றிரவி முதலா விறைஞ்சுவார் சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு முந்தித் தொழுது வணங்குங் கோயின் முதுகுன்றே.2.064.2
எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும். 

2159 நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரம் தேடு மடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப் பாடுங் குயிலி னயலே கிள்ளை பயின்றேத்த மூடுஞ் சோலை முகிறோய் கோயின் முதுகுன்றே.2.064. 3
மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும். 

2160 தெரிந்த வடியார் சிவனே யென்று திசைதோறும் குருந்த மலருங் குரவி னலருங் கொண்டேந்தி இருந்து நின்று மிரவும் பகலு மேத்துஞ்சீர் முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.2.064.4
அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும் விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும். 

2161 வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தம் சித்த நைந்து சிவனே யென்பார் சிந்தையார் கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே.2.064.5
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும். 

2162 வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமா னுறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே.2.064. 6
மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடிவகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முது குன்றாகும். 

2163 வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில் பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.2.064. 8
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும். 

2164 அல்லி மலர்மே லயனு மரவின் அணையானும் சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.2.064. 9
அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக்கொடிகள் அருகில் இருந்துகண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும். 

2165 கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில் திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.2.064.10
கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும். 

2166 அறையார் கடல்சூ ழந்தண் காழிச் சம்பந்தன் முறையான் முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.2.064. 11
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.