LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

2024-ம் ஆண்டுக்கான அவனியாபுரம், அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் தேதிகளை அறிவித்த ஆட்சியர் சங்கீதா, பாரம்பரியமாகக் கடந்த காலத்தில் நடைபெற்ற இடங்களிலே இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு 2024-ல் நடைபெற உள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான இந்த ஜல்லிக்கட்டைக் காண உலகம் முழுவதிலும் இருந்து வெளிநாட்டவர் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழர்களும் இதற்காகவே வந்திருந்து காளை அடக்குதல் வீர விளையாட்டை கண்டு பரவசமடைகின்றனர். இதில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் இளைஞர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தமிழனின் வீர விளையாட்டு என அழைக்கப்படும் இந்த ஜல்லிக்கட்டு குறித்து நம்முடைய இலக்கியங்கள் என்ன கூறுகின்றன எனப் பார்ப்போம். 

 

இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.

 

பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.

 

கலித்தொகையில் ஏறுதழுவுதல்

 

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

 

குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பெரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்.

 

இதனை, இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்

கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.

 

ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.

 

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம்முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,

 

'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)

என்று குறிப்பிடும்.

கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

 

பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடி ஒலி போல முழக்கமிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

 

ஏறு தழுவுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்

பல வகைக் காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்பட்டிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.

 

ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன் குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

 

எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

 

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64)

 

என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

 

கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆய மகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.

 

காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

 

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியது: "உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ம் தேதி ( திங்கள்கிழமை ) தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

 

பாலமேடு பேரூராட்சியில் மஞசமலை ஆறு திடலில் 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) பாலமேடு ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டை முனி வாசல் மந்தை திடலில் 17-ம் தேதி ( புதன்கிழமை ) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த ஆண்டும் சிறப்பாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்துச் சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

by Kumar   on 05 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.