|
||||||||
உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? |
||||||||
+2 மாணவர்கள் தேர்வு முடிவு தெரிந்து தற்போது எந்த கல்லூரியில் படிக்கலாம்? என்ற தேடலில் மூழ்கி இருப்பீர்கள். உங்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த எதிர்காலம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது நீங்கள் அடுத்து தேர்ந்தெடுக்கும் கல்லூரியைப் பொருத்து உங்கள் அடுத்த கட்டம் அமைய இருக்கிறது.
சரியான கல்லூரியை தேர்ந்தெடுத்து அது நல்ல தரமான கல்லூரியாக அமைந்துவிட்டால் உங்கள் 70% வெற்றி உறுதிப்படுத்தப்படும். காரணம், கல்லூரிப் படிப்புகளில் பெரும்பாலானால் பங்கு வகிப்பது ஒரு கல்லூரியின் தரமும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரமும்தான். சரி, ஒரு நல்ல கல்லூரியை தேர்ந்தெடுக்க எளிமையான வழிமுறை ஏதாவது இருக்கிறதா என்றால், அப்படி ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், நேரடி ஏஜண்டுகள் வழியாகவும், அங்கே படிக்கும் மாணவர்கள் வழியாகவும் கூவி கூவி அவர்களின் கல்லூரியில் சேர அழைப்பார்கள். எனவே, அழகான விளம்பரம், அருமையான இசை, ரம்யமான சூழ்நிலை கொண்ட கல்விவளாகம், ஏசி உள்ளிட்ட பல்வேறு குளு குளு வசதிகள் போன்ற பலவற்றை நீங்கள் விளம்பரங்களில் பார்க்கலாம். ஆனால் இதில் எது உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த, உங்களை ஒரு வெற்றியாளராக மாற்றும் வல்லமை கொண்டது என்று அறிவதும் அந்த அறிவைக் கொண்டு சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதும் மாணவர்களாகிய உங்கள் கைகளிலிலும், பெற்றோர்கள் கைகளிலும் தான் உள்ளது.
சரி, ஒரு கல்லூரி நல்லதா என்பதை அறிய எளிமையான வழிமுறைகள் இல்லை என்றால் அதைப் பற்றி முழுமையாக அறிய வேறு என்னதான் செயவது?
உங்கள் படிப்பிறகு ஏற்ற கல்லூரியைத் தேர்ந்தெடுக்க அவசரம் காட்டாமல், விளம்பரங்களில் மயங்காமல் கீழ்கண்ட சில களப்பணி வேலைகளை செய்யவேண்டும்.
அடுத்து கல்லூரி அளவில் என்னென்ன வசதிகளை மாணவர்களுக்கும் பெற்றோர்களும் கவனமாகப் பார்க்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்:
கல்லூரி மற்றும் படிப்பின் அங்கீகாரம்: கல்லூரி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அந்தக் கல்லூரி குறித்த வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா? கல்லூரிக்கு அங்கீகாரம் வாங்கி சில படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் மாணவர்கள் இறுதியாண்டு வருவதற்குள் அங்கீகாரம் வாங்கிவிடலாம் என்று பல படிப்புகளை நடத்தி வருவதை காண்கிறோம். எனவே, பொறியியல் கல்லூரியாக இருந்தால் அண்ணா பல்கலைக்கழகம், அல்லது வேறு படிப்புகளாக இருந்தால் அந்தந்த அனுமதியளிக்கும் அமைப்புகளின் இணையதளங்களை பார்த்து அல்லது அவர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு கீழ்காணும் இணையதளங்களில் முழுமையான விவரங்களைப் பெறலாம்:
கல்லூரி குறித்த முழுமையான விபரங்கள்: ஸ்டடிகைடுஇன்டியா.காம் ஆசிரியர் பயிற்சி: www.ncte-india.org மருத்துவம் - www.mciindia.org பல் மருத்துவம் – www.dciindia.org சட்டம் - www.barcouncilofindia.org கலை அறிவியல் படிப்புகள்: www.ugc.ac.in
கல்லூரி வளாக வசதிகள்: கல்லூரிகள் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில் கொடுக்கும் படங்களைப் பார்த்து முடிவெடுக்காமல், நீங்களே நேரடியாக கல்லூரிக்கு செல்லுங்கள். அங்கு உள்ள நீங்கள சேர விரும்பும் பாடத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனைபேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், வகுப்பறை வசதிகள், தொழில் நுட்ப வசதிகள், ஆய்வகக வசதிகள், விளையாட்டு, போக்குவரத்து வசதிகள், தேசிய அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் போன்றவற்றில் இந்த கல்லூரி ஏதாவது பங்கேற்று இருக்கிறதா? போன்ற பலவற்றை பார்ப்பதன் மூலம் அந்த கல்லூரியின் முழுமையான நிலையை அறிய முடியும். சேர்ந்த பிறகு உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது.
இதற்கு எளிமையான வழி, ஓரிரண்டு மாணவர்கள் அங்கே படிப்பவர்களை தொடர்புகொண்டு சரியான தகவல்களை கொடுப்பவர்களா என்று பார்த்து அறிந்து கொள்ளவும்.
இணையதளம் பார்வையிடுதல்: அரசாங்க வலியுருத்தளின்படி பெரும்பாலான கல்லூரிகள் அவர்கள் அங்கீகாரம், வசதிகள், அவர்களின் தரம், அவர்கள் அளித்த ஆண்டு அறிக்கைகள், ஆசிரியர்கள் அவர்களின் படிப்புகள், படிப்புகள் போன்ற அனைத்தையும் வெளிப்படையாக இணையதளத்தில் போட்டிருப்பார்கள். அதைப் பார்த்து தேவையான தகவல்களை திரட்டிக்கொள்ளவும்.
வேலைவாய்ப்பு விபரம்: பல்வேறு நல்ல கல்லூரிகள் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்ய தனி அலுவலரை அல்லது துறையை ஏற்படுத்தி அதிக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை(Campus Placement) உண்டாக்கி வருகிறார்கள். எனவே, அப்படி ஒரு துறை இருக்கிறதா? கடந்த சில ஆண்டுகளில் எந்தெந்த நிறுவனகள் வேலைவாய்ப்பு வழங்க வந்தன, எத்தனை பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைத்தன, என்ன சம்பளம் போன்ற விபரங்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
மற்ற வசதிகள்: கல்லூரி தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது, அதில் மேல்படிப்பு படிக்க வசதிகள் இருக்கிறதா, கல்லூரி பாடங்கள் தவிர்த்து வேறு என்னவிதமான திறமைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் போன்ற விபரங்களை அறிந்துகொள்ளவும்.
ச.பார்த்தசாரதி கல்வியாளர் |
||||||||
by Swathi on 30 May 2014 0 Comments | ||||||||
Tags: Choose Right College How to Choose a Right College Choose College நல்ல கல்லூரி கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி நல்ல கல்லூரி எது | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|