|
|||||
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி மகா புஷ்கரம்- 12-ந் தேதி துவங்குகிறது! |
|||||
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரம் அக்டோபர் 12-ந் தேதி துவங்குகிறது. ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா ஆகும். அதே போல் ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா ஆகும். பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார். குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.அப்போது, மும்மூர்த்திகளும் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பார்கள். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பார்கள். நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி. ஈசனால் உருவாக்கப்பட்ட சிறப்பிற்குரியது தாமிரபரணி.சிவபெருமானின் " தென் திசை செல்க’’ என்ற கட்டளையை ஏற்று பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் நீராட சிவபெருமான் பொதிகை மலையில் உருவாக்கிய நதியே தாமிரபரணி. தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று. அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்த நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் அக்டோபர் 12 -ந் தேதி அன்று மகாபுஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் அக்டோபர் 11-ந் தேதி இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். எனவே மறுநாளில் தாமிரபரணி புஷ்கரம் ஆரம்பமாகிறது. மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது. விருச்சிகம் தொடங்கி, துலாம் வரையிலான ராசிக்காரர்கள் அவரவருக்குரிய நாட்களில் நீராடுவது சிறப்பு. அதேபோல் இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். |
|||||
by Mani Bharathi on 05 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|